Thursday, August 25, 2011

சீதாபாரதியின் ‘அமீபாவின் கால்களும்’ வாசகப் பார்வைகளும்

அமீபாவின் கால்கள்

ம‌க‌ள் அறிவிய‌ல் உண்மைக‌ள்
ப‌டித்துக் கொண்டிருந்தாள்
அமீபா ஒர் செல் உயிரி
அமீபாவுக்கென்று த‌னி உருவ‌ம் இல்லை
அமீபாவுக்கு கால்க‌ள் கிடையாது
த‌ன் உருவ‌த்தின் நீட்சியாக‌
கால்க‌ள் போன்ற‌
பொய்க்காலிகளைக் கொண்டது
அம்மா கேட்டியா’வென‌
ஆச்ச‌ரியப்ப‌ட்டுக் கொண்டாள்

பின் த‌மிழ்ப்புத்தகத்தை எடுத்து
பெண் சுத‌ந்திர‌ம் ப‌ற்றிய பாடமொன்றை
ப‌டிக்க‌த் தொட‌ங்கினாள்

அதில் ஆர்வ‌ம் இல்லாம‌ல்
உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தை எடுத்துவைத்துக்கொண்டு
ஆராய்ந்தாள்
ஆப்பிரிக்காவில் அடிமைக‌ள் இருக்கின்ற‌ன‌ராமே
உண்மையா அம்மா என்றாள்

அமீபாவின் பொய்க்காலிக‌ளைப் போன்ற‌
பெண் சுத‌ந்திர‌த்தைப் பெற்ற அடிமைக‌ள்
எங்கேயும் உள்ள‌ன‌ர் என்றேன்
நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி

போம்மா ஒண்ணும் புரிய‌லை
என‌ விளையாட‌ ஒடிவிட்டாள்
திரும்பி பார்த்தேன்
சும்மா உட்கார்ந்து செய்தித்தாள்
ப‌டித்துக்கொண்டிருந்த‌வ‌ரும்
ச‌ட்டையை மாட்டிக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தார்!



வாசகப் பார்வைகள்



விதூஷ்  அவரது தாய் அவருக்கு சின்னவயசிலேயே ஒருவேளை "பாத்திரம் கவிழ்த்து வைக்க" சொல்லித் தராமல் இருந்திருந்தால், மனைவி கணவனிடம் வேலையைப் பகிர சொல்லலாம் என்றே நினைக்கிறேன். குடும்ப அமைதி அது இதுன்னு கம்ம்னு இருந்துட்டு, கவிதையாய் புலம்பரதில் என்ன பிரயோஜனம்.9:54 am (edited 9:54 am)
லதாமகன் . - இந்த புலம்பல்ல எனக்கும் எதிர்கருத்துதான். இருந்தாலும், கவனிக்கப்படவேண்டிய ஆளுங்கல்ல சீதாவும் ஒருத்தர்னு நினைக்கிறேன். தளத்த படிச்சுப்பாருங்க விதூஷ்9:59 am
                 விதூஷ்  - - சீதாம்மா எழுதுவதை ஏற்கனவே படிக்கிறேன். ஏதோ ஒரு     கையாலாகாதத்தனம் தெறிக்கும், எங்க பாட்டியின் குரல் போலவே. வேற வழி, பொருத்துக்கிறேன் என்பதான பெண்மையின் குரல். செவிமடுக்கலாம், கையை பிசைந்து கொண்டு கவலைப் படலாம், வீட்டுக்குள் நுழைந்து சவுக்கால் அடிக்க முடியுமா.. அதற்கு இவர்களே (ஆசிரியர் அல்ல, இவர்கள் கவிதையில் எழுதி / பேசி இருக்கும் பெண்கள்) அனுமதிக்க மாட்டார்கள்.

காய்ந்த சருகுகள் உடைவதைப் போல
நொறுக்கி விட்டு போயிருக்கிறாய்
உன் காலடியில்
என் கண்ணாடி உணர்வுகளை..
அப்போதும் தம் கூர்முனைகளை
மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றன
உன் பாதங்கள் கீறிவிடாத படிக்கு...


வாசகசாலை :

இந்தக் கவிதை குறித்து பேச இன்னும் இருக்கிறதாய் தோன்றுவதால் இங்கு பகிரப் பெறுகிறது.இந்த உத்தி ஞானக்கூத்தனின் கவிதைகளிலும் பசுவைய்யா கவிதைகளிலும் எஸ்.வைதீஸ்வரனின் கவிதைகளிலும் பயனுற்று இருந்த போதும் அது சுயம் மற்றும் புறச் சமூகம் சார்ந்து புழங்கி வந்தது. பெண் விடுதலை சந்ததி வழியான சொல்முறையில் இயல்பாக வெளிப்பட்டிருப்பது கவனத்திற்குரியது எனக் கருதலாம் .பார்வைகள் வரவேற்கப் படுகின்றன.

நன்றி : லதாமகன்,விதூஷ் 

9 comments:

க ரா said...

கவிதை அருமை, ரொம்ப நல்லாயிருக்கு இந்த மாதிரி எத்தன வார்த்தைகள வேணா அடுக்கி பாராட்டலாம்... ஆனா கவிதையோட கருத்துகளில் உடன்பாடு இல்லை... பெண்களின் உணர்வுகள் மிதிக்கப்பட்டு இருப்பதை போல, ஆணும் அவன் உணர்வுகள் களையபட்டுதான் நிற்கிறான் நிறைய இடங்களில்.. பெண்கள் அவர்களுக்கான சுதந்திரம் வேண்டி போராடி வரும் இக்காலத்தில், ஆண்களயும் சுதந்திரத்தயும் பெண்கள் கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.. இன்னும் பேசிக்கொண்டே போகலாம் .. இதை பற்றி... இரு சாராரும் மற்றோரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடத்தல் இருவருக்கும் நலம்...

க ரா said...

எல்லா கவிதைகளும் வார்தைகளின் அலங்காரங்களாக பார்க்கப்படும் வரை மிக அருமையாக இருக்கின்றன.. ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக பார்க்கபடும் பொழுது எதுவுமே உலகப்பொதுமறையாக உணரமுடிவதில்லை. இது மனிதர்களின் தவறா ? :)

Thekkikattan|தெகா said...

//காய்ந்த சருகுகள் உடைவதைப் போல
நொறுக்கி விட்டு போயிருக்கிறாய்
உன் காலடியில்
என் கண்ணாடி உணர்வுகளை..
அப்போதும் தம் கூர்முனைகளை
மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றன
உன் பாதங்கள் கீறிவிடாத படிக்கு..//

மிக அழகாக உணர்வுகள் பதிக்கப்பட்டுள்ளது. தினப்படி நாம் சந்திக்கும் பிரச்சினைகளை தலையிலடித்துக் கொண்டு கடந்து விடுவது, ஒரு சாதாரணனின் இயல்பு. ஆனால், அதனையே வார்த்தைகளைக் கொண்டு கவிதை/கதை வடிப்பவனின் திறமையையும் உட்செலுத்தி காலத்திற்கும் நிற்குமாறு செய்வது ஒரு படைப்பாளின் ஆளுமை என்பதாக நான் கருதுகிறேன்.

அது இந்த ஏழு வரிகளில் அழுந்த பதிக்கப்பட்டிருக்கிறது.

அதற்காக இதனை படைத்தவர் அனுபவித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை...

நேசமித்ரன் said...

இராமசாமி,தெகா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்

sakthi said...

காரணம் என்னவாக இருந்த போதிலும் பல சமயங்களில் பெண் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இன்னும் இருக்கின்றாள் பெண் சுதந்திரம் என்னவென்பது கேள்விக்குரியதாக தான் இருக்கின்றது சில சமயங்களில் அது புலம்பலாக வெடிக்கின்றது பல சமயங்களில் கண்ணீராக ....

குட்டிப்பையா|Kutipaiya said...

நன்றி நேசன் :)

விதூஷ் - இது என் தாய் எனக்கு பாத்திரம் கவிழ்க்க சொல்லிக்கொடுத்தது குறித்ததோ நான் என் குடும்பத்தில் என்ன மாதிரியான உதவிகளைப் பெறுகிறேன் என்பது குறித்ததான வரிகளோ அல்ல. இன்னும் எத்தனை பேர் பாத்திரம் கவிழ்ப்பது போன்ற வேலைகளை மட்டுமே தம் வாழ்க்கையாக நினைத்துக் கொள்ள கட்டாயப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் அதற்கு இந்த சமூகத்தின் உடந்தையும் பிரச்சனைகளில் உதாசீனமும் அலட்சியமும் காட்டும் மனப்பாங்கு குறித்ததுமே. கடைசி வரிகள் அதற்கான குறியீடே.

நேசனின் முதல் பின்னூட்டத்தைப் போல பெண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரச்சனைகள் அதிகம் தானே குறிப்பாக நம் சமூகத்தில்! பெரும்பான்மையும் அது தானே? அதை மறுக்க முடியுமா?! இதே வாதத்தில் வைக்கப்பட்ட இன்னொரு பதிவான
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்! இதையும் விருப்பமிருந்தால் படித்துவிட்டு வாருங்கள் . அதைப் பற்றி இங்கு விரிவாக பேச வேண்டாமென நினைக்கிறேன்.

உள்ளதை எளியதாக சொல்ல வந்த முயற்சி தான் இது. நான் புரட்சியோ அதற்கான தீர்வுகளையோ சொல்ல இங்கு சொல்ல வரவில்லை. இன்னமும் உலகம் பார்க்காத, பார்க்க ஊக்குவிக்கப்படாத, அது தேவையும் இல்லை என நினைக்கக் கூடிய சமூகத்தில் வாழும் என் மத்திய, அடித்தட்டு வர்க்கத் தாய்மார்கள், சக சகோதரிகளின் உணர்வாக எழுத முற்பட்டது.

அனைவரின் பார்வைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி!

குட்டிப்பையா|Kutipaiya said...

நன்றி நேசன் :)

விதூஷ் - இது என் தாய் எனக்கு பாத்திரம் கவிழ்க்க சொல்லிக்கொடுத்தது குறித்ததோ நான் என் குடும்பத்தில் என்ன மாதிரியான உதவிகளைப் பெறுகிறேன் என்பது குறித்ததான வரிகளோ அல்ல. இன்னும் எத்தனை பேர் பாத்திரம் கவிழ்ப்பது போன்ற வேலைகளை மட்டுமே தம் வாழ்க்கையாக நினைத்துக் கொள்ள கட்டாயப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் அதற்கு இந்த சமூகத்தின் உடந்தையும் பிரச்சனைகளில் உதாசீனமும் அலட்சியமும் காட்டும் மனப்பாங்கு குறித்ததுமே. கடைசி வரிகள் அதற்கான குறியீடே.

நேசனின் முதல் பின்னூட்டத்தைப் போல பெண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரச்சனைகள் அதிகம் தானே குறிப்பாக நம் சமூகத்தில்! பெரும்பான்மையும் அது தானே? அதை மறுக்க முடியுமா?! இதே வாதத்தில் வைக்கப்பட்ட இன்னொரு பதிவான
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்! இதையும் விருப்பமிருந்தால் படித்துவிட்டு வாருங்கள் . அதைப் பற்றி இங்கு விரிவாக பேச வேண்டாமென நினைக்கிறேன்.

உள்ளதை எளியதாக சொல்ல வந்த முயற்சி தான் இது. நான் புரட்சியோ அதற்கான தீர்வுகளையோ சொல்ல இங்கு சொல்ல வரவில்லை. இன்னமும் உலகம் பார்க்காத, பார்க்க ஊக்குவிக்கப்படாத, அது தேவையும் இல்லை என நினைக்கக் கூடிய சமூகத்தில் வாழும் என் மத்திய, அடித்தட்டு வர்க்கத் தாய்மார்கள், சக சகோதரிகளின் உணர்வாக எழுத முற்பட்டது.

அனைவரின் பார்வைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி!

rajasundararajan said...

அமீபா, ஓர் அம்மா, ஒரு மகள், செய்தித்தாள் படிக்கிற ஒருவர் - இவர்களை உள்ளிட்டு, அம்மா பார்வையில் எழுதப் பட்டிருக்கிற காட்சி/கருத்தாக்கம்.

அமீபாவில் ஆண்பெண் உறவில்லை. தன்னைத் தானே பிளந்து இனம்பெருக்கிக் பல்குகிறது. நகர்வதற்கும் தன் உடலையே நீட்டி வளைத்துப் போலிப் பாதங்களை (pseudo pods) உருவாக்கிக் கொள்கிறது. எனவே, நம் புரிதலில், அமீபா சர்வ சுதந்திரமாக இருக்கிறது.

இனப் பெருக்கத்துக்காக ஆண் பெண் உறவுசார் நமக்கு அப்படியொரு விடுதலை சாத்தியமில்லை.

//அமீபாவின் பொய்க்காலிகளைப் போன்ற/ பெண் சுதந்திரத்தைப் பெற்ற அடிமைகள்// என்பதில், எனவே, ஒரு சுயகற்பித விடுதலையே பேசப் படுகிறது. அதற்குமேல் கிண்டிக் கிளற ஏன் சுரண்டக் கூட ஒன்றுமில்லை என்கிறது, //நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி// என்னும் அடி.

'தமிழ்ப் புத்தகத்துப் பெண் சுதந்திரம்' என்றொரு சலிப்பின் வெளிப்பாடும் இடையில் வருகிறது. 'தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்' அனைய பெண்கள் நம் நினைவை இடறுகிறார்கள்.

//திரும்பிப் பார்த்தேன்// என்பதில் அவ்வேளை நிகழ்வு மட்டுமன்று, வரலாறு மொத்தமும் வினவப் படுகிறது.

//சும்மா உட்கார்ந்து செய்தித்தாள்
படித்துக்கொண்டிருந்தவரும்
சட்டையை மாட்டிக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தார்!//

'சும்மா இருத்தலே சுகம்' என்றொரு தத்துவக் கோட்பாடு நம் பண்பாட்டில் உண்டல்லவா? 'சும்மா உட்கார்ந்து செய்தித்தாள் படித்தல்' என்பது, தியானத்தில் அமர்ந்து ஞானம்பெற முயல்வதின் கேலிச் சித்திரமோ?

வெற்றுடம்பு = கவிழ்த்த பாத்திரம். அதைச் சட்டையிட்டு மறைக்கிற குற்ற உணர்வு.

வெளியேறுதல் = தப்பித்தல் (விடுதலை கற்பித்தல்).

வெட்கமாக இருக்கிறது: நம்மிடம் ஸ்ருதி, ஸ்ம்ருதி, சூக்தங்கள் உண்டு; ஆண்-பெண்-சந்ததி அமைப்பில் விடுதலை இன்னதென்ற விவரம் உண்டா?

//பெண் சுதந்திரம் பற்றிய பாடமொன்றை
படிக்கத் தொடங்கினாள்;
அதில் ஆர்வம் இல்லாமல்
உலக வரைபடத்தை எடுத்துவைத்துக்கொண்டு
ஆராய்ந்தாள்//

இப்படித்தான் இருக்கிறது ஓரொரு குழந்தையின் முன்னும் காலம்.

Vidhoosh said...

//பெண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரச்சனைகள் அதிகம் தானே குறிப்பாக நம் சமூகத்தில்//

சீதாம்மா. இருக்கு. ஆமாம். இன்னின்ன பிரச்சினைகள் இருக்கிறது உண்மையே. ஆனால் இன்றும், சமூகத்தைக் காட்டிலும், தீர்க்கவியலாத பிரச்சினையாகவும், பெண்களுக்கு பெரிய சவாலாகவும் இருப்பது குடும்ப வன்முறை என்பதை உணர்ந்திருப்பீர்கள். இதிலிருந்து வெளிவர கல்வி அறிவு, வேலைவாய்ப்பு, சுயசார்பு என்பது மட்டும் இல்லாமல், அறியாமை என்ற பாராசைட் ஒன்றையும் களைந்தாக வேண்டி இருக்கு. இதெல்லாம் தனிநபர் மீதான வன்முறை என்பதை புரியவே நெடுங்காலம் ஆகி விடுகிறது. இதைக்குறித்து அதிகம் எதுவும் செய்ய இயலாத நிலையிலேயே இருக்கிறோம்.