Monday, August 29, 2011

க.பாலாசியின் ‘ராசம்’ சிறுகதையும் எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வையும்

என்றுமில்லாது இன்று ஆளோடிக்கட்டிலில் கொஞ்சம் படுக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டினுள்ளே டங்..டங்.. என்று தரை அதிர்வதற்கு என் மனைவிதான் காரணம். பெயர் ராசம். இந்த 26 வருட திருமண வாழ்வில் அவளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருந்திருக்கிறது. ஆயினும் எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. சின்ன வயதில் தந்தையை இழந்த என்னை பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தது என் அம்மாதான். மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி வேறென்னவாக இருக்கமுடியும். என் பாட்டன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.

ஒரு படி மேலேபோய் என் தாத்தன் குடும்பச்சண்டையில் பாட்டியின் காலை கடப்பாறையால் முட்டிக்குமேலே ஓங்கி அடித்திருக்கிறான். அய்யோ..அய்யோ...என்று அடுத்தவீட்டுக்குகூட கேட்காதபடி அலறிவிட்டு அடுத்தவேளை சோற்றை பொங்கிப்போட்ட புண்ணியவதி அவளென்று குடும்ப வரலாறை கேட்கும்போதெல்லாம் என் அத்தை கண்ணீர்மல்க கூறுவாள். எவ்வளவு கொடியவன், கிராதகம் பிடித்தவன் என்று அப்போதும் நினைத்துக்கொள்வேன். இப்போது நினைத்தாலும் அப்படித்தான். பித்துக்குளி. நல்லவேளை நமக்கந்தளவுக்கு புத்திகெட்டுப்போகவில்லை என்பதற்கு என் படிப்பறிவோ, பகுத்தறிவோ காரணமாயிருக்கும் அக்காவின் மகளை அவளின் 16 வயதில் கட்டிக்கொண்டேன். என் குடும்ப ரத்தம்தான் ராசத்திற்கு. அதனாலோ என்னவோ என்னிடம் அரைவாங்கி கண்ணம் வீங்கினாலும் எனக்கு சோறு உண்டு. 3 வருட தாம்பத்தியத்தில் பெற்றெடுத்ததை மலர்கொடி என்ற நாமம்சூட்டி ஒருவழியாக சென்றவருடம் கரையேற்றினேன். கரையேற்றினேன் என்பதுதான் அத்தனை சிரமங்களுக்குமான ஒற்றைச்சொல்.

ஒரே பெண் வேறெதுவுமில்லை. சிறுவயதில் அவள் சில்லிக்கோடு விடையாடும் அழகு தனிதான். கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நானும் ராசமும் மற்றவர்களுடன் அவள் போட்டிப்போட்டு துள்ளி துள்ளி நொண்டியடித்து விளையாடும் பாங்கை ரசித்திருக்கிறோம். ராசம்தான் அவளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தாள். ராசமும் சிறுவயதில் இந்த விளையாட்டில் தேர்ந்தவள்தான். பெண் பார்க்க நிச்சயமாகி சிங்காரத்தின் கூண்டு வண்டியை வாடகைக்கெடுத்து போகும்போதுகூட தெருவாசலில் விளையாடிக்கொண்டுதான் இருந்தாள். ‘விளையாட்டுப்பிள்ளையாவே வளந்துட்டா, போ..போ..மூஞ்சி கழுவியா’என்று அவளை துரத்திவிட்டு மாமா என்னிடம் அசடு வழிந்ததுகூட இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஏணிப்படிகள்போல ஆறு பெட்டிகளுடன் கூடியதில் மலையிலிருந்து ஆரம்பித்து 5,4,3,2,1 வரை வந்து பிறகு, கைமேல் சில்லியை வைத்து நொண்டியடிக்கவேண்டும். புறங்கை, விரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, இறுதியாக மேட்டா கீட்டாவில் முடியும் அந்த விளையாட்டு தெருப்பெண்களின் சமயோசித விளையாட்டு, இன்னும் சொல்வதானால் பாரம்பரிய விளையாட்டு. மேட்டா கீட்டாவில் எந்த பெட்டியில் சில்லியை போடுகிறோமோ அந்த பெட்டி ஒரு உப்பு என்று விளையாடிய பெண் கோடுபோட்டுக்கொள்வாள். அந்த பெட்டியை எதிராளி நொண்டியடிக்கும்போது தாண்டித்தான் செல்லவேண்டும். விதிமுறை. வயதுக்கு வந்த பின்னும் மலருக்கு இந்த விளையாட்டு அலுக்கவில்லை. ராசத்திற்கும் வேடிக்கை பார்ப்பதும் அலுக்கவில்லை.

என் மகளை பெண்பார்க்க வந்தபோதும் சில்லிக்கோடுதான் விளையாடிக்கொண்டிருந்தாள். என் மாப்பிள்ளையிடம் நான் அசடுவழியவில்லை. சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, பார்க்க அழகாயிருந்தாலும்கூட. நான் வேலைக்கு சென்றபின் ஆக்கி இறக்கி வைத்த நேரம்போக ராசத்தை வேறெந்த வேலைகளும் இழுத்துப்பிடிக்கவில்லை. மிஞ்சிப்போனால் என் துணிகளை துவைப்பாள். உண்டு தின்ற ஏனங்கள். அப்படியேதும் அவளின் தனிமையை ஆட்கொண்டதாக தெரியவில்லை, ஏன் நானும்கூட. என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.

இரவுகளில் ராசம் தூங்கும் போது எதோ நெஞ்சழுத்தக்காரியின் முகமாகத்தான் அவள் முகம் இருக்கும். என் முகத்தைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். சென்றமாதம்தான் அவளின் நெஞ்சாழ்மையை இந்தக்கோலத்தில் பார்த்தேன். ஒரு கண்ணாடியும் அது உடைந்தால் தெரியும் இரண்டு பிம்பங்களுமாய் என் முன் அவள். மலரின் அந்த பச்சைக்கலர் பாவாடை தாவணியை உடுத்தியிருந்தாள். இந்த 45வது வயதில் அவளுக்கு எடுப்பாகத்தான் இருந்தது என்று சொன்னால் நான் பைத்தியமோ என்று எனக்கே தோன்றும். சிகையில் இரட்டைப்பின்னல் வேறு. கொல்லையில் பூத்திருந்த திசம்பர் பூவைக் கட்டி சூடியிருந்தால். அந்த நெத்திச்சுட்டி ஏதென்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அகோரமான தோற்றம்தான். அருகில் செல்லும்வரை என்னைப்பார்க்காதவள் சென்றவுடன் விரைத்த உடலுடன் மலங்க மலங்க விழித்தது என் 52 வருட வயது முரட்டையும், திடகாத்திரத்தையும் பொலபொலவென விழ்த்தியது. இன்று நினைத்தாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வரத்தான் செய்கிறது.

நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.

*



எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வை 


சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது

ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது

நன்றி திரு.ஜெயமோகன் - http://www.jeyamohan.in/?p=12992


Thursday, August 25, 2011

சீதாபாரதியின் ‘அமீபாவின் கால்களும்’ வாசகப் பார்வைகளும் -2


Prabhakar A - தனிமனித உணர்வுகள், அதன் வெளிப்பாடுகள் எல்லாருக்கும் பொருந்த வேண்டிய அவசியமில்லை. இல்லையா, க.இரா?
க இராமசாமி - தனிமனித உணர்வுகள் ஒருசாராரயே தொடர்ந்து குற்றம் சொல்றது ஏன் தெகா ? இந்த கவிதைகள் எல்லாவற்றிலும் ஆணகளின் சித்திரம் மோசமானவனாக்வே வரையப்படுகிறேதே எனபதுதான் என் ஆதங்கம் ....)
Prabhakar A - அது ஒரு உரையாடல் மாதிரி... அவங்வங்க பார்வையை முன் வைக்கிறோம். சித்திரம் முழுமையடைகிறது. விசயங்களின் கனம் பொருட்டும், அது முன் வைக்கப்படும் மொழியின் நயம் பொருட்டும் அதன் ஆழம் உள்வாங்கப்படுகிறது. அது பிறரின் நுண் உணர்வுகளை எழுப்பும் திறனையும் கொண்டது. உணர்வுகளை அதற்காகத்தானே நாம் எழுத்தில் வடித்து வைக்கிறோம் ??
க இராமசாமி - தெகா நான் சொல்றது நாங்களும் உங்க்ளோட உணர்வுகள மதிக்கறோம்.. நீங்களும் மதிங்கன்னு கேட்டுக்கறோம்.. நான் கவிதைய குறை சொல்லல தேகா...
Prabhakar A - புரியுது, கரா. அவங்க, நாம எல்லாம் ஒரே குட்டை, மட்டைதான். உணர்வுகளை பகிர்ந்து கொள்வதின் மூலமாக பல உலககங்களை தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்புதான் இந்த எழுத்து. அம்புட்டுத்தேய்ன். :) Peace!!
nesamitran online - இராமசாமி,

அழகியல் பிரதியாக, கொன்று தெய்வங்களாக, காதலுக்குரிய, காமத்திற்குரிய பிண்டங்களாக பெண்ணை புகழ்ந்தும் வியந்தும் நயந்தும் இலக்கியமும் சமூகமும் வைத்திருந்தாகி விட்டது.அதன் கட்டுகளில் இருந்து வெளியேறுதல் தன் துயரை பாடுதல் ,உரிமைகளை மீட்டெடுத்தல் மொழியில் திருவிக,பாரதி துவங்கி இன்று வரை தொடர்கிறது இன்றைக்கு எது சுதந்திரம் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. பிரபஞ்சவுடல் ,உலகமயமாக்கலில் பெண் ஆணை விட அதிகம் பொருள் ஈட்டுகிறாள். அதிக மதிப்பெண் பெறுகிறாள்,அதிகாரங்களில் பதவிகளில் இருக்கிறாள் என்ற போதும் குடும்ப அமைப்புகளில் மன அமைப்புகளில் மாற்றங்கள் வர வேண்டி இருக்கிறது.பேசன் டிவிகளில், விளம்பரங்களில் , திரைப்படங்களில் என்னவாக இருக்கிறாள் பெண், ஏன் இருக்கிறாள் ?விமானங்களில்,ஹோட்டல்களின் முகப்புகளில் என்ன காரணத்திற்காய் பெண் அமர்த்தப் பெற்றிருக்கிறாள் ஆண்களின் சதவிகிதம் என்ன ?

மேலும் நீங்கள் பெண்களிடம் எவ்விதமான சுதந்திரத்தை கோருகிறீர்கள்? குற்றம் சுமத்துவதில் இருந்தா ?

அவள் தன் உடலைக் கொண்டாடினால் பரத்தை என்றும் அறிவைக் கொண்டாடினால் திமிர் என்றும் ஏதேதோ வழஙு பெயர்கள்.அவள் துயரை பாடுதல் வழி தன் சுயத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்துகிறாள் என்று எண்ணுகிறேன் .

இன்றைக்கு பெருகும் விவாகரத்துகளுக்குப் பின் ஆண்களின் மறு மண விகிதமும் பெண்களின் மறுமண விகிதமும் ஒன்றாய்த்தான் இருக்கிறதா ?

பேசுவோம் மக்கா :)
சக்தி செல்வி - well said nesan anna :)))4:07 pm
விந்தைமனிதன் ராஜாராமன் - நேசன், பின்னிட்டீங்க!4:13 pm
சக்தி செல்வி - காரணம் என்னவாக இருந்த போதிலும் பல சமயங்களில் பெண் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இன்னும் இருக்கின்றாள் பெண் சுதந்திரம் என்னவென்பது கேள்விக்குரியதாக தான் இருக்கின்றது சில சமயங்களில் அது புலம்பலாக வெடிக்கின்றது பல சமயங்களில் கண்ணீராக ....4:14 pm
க இராமசாமி - கட்டாயம் கிடையாதுங்க சக்தி செல்வி.... என்னோட (நொ)சொந்த அனுபவங்கள் அப்படி...4:16 pm
சக்தி செல்வி - இருக்கலாம் இராமசாமி சில ஆண்கள் பெண்களால் படும் பாட்டையும் நான் அறிவேன் ஆனாலும் மெஜாரிட்டியாக பெண்கள் தாம் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது என் கருத்து4:18 pm
அதிகாலை பனி - @ராமசாமி,உங்க உணர்வுகள் நியாயமானவை.வலி,அனுபவம் ஆண் ,பெண்ணுக்கு பொதுவானது.4:19 pm
kayalvizhi muthuletchumi - :) ஒரே ஒரு ஜெனரேசனில் ஏற்பட்ட மிகக்குறைந்த விழுக்காட்டு மாற்றங்களையே நொந்து போறதுன்னு சொன்னா..
பலகாலமாக பாதிப்புக்குள்ளாக்கப்பட்டோர் கவிதை புனைவதில் குறை காண்பது .... என்பதை என்னவென்பது.. இதற்காக பரிந்து பேசுவதற்கும் கூட தயக்கமாக இருக்கிறது..பனி சொன்னது போல வலி அனுபவம் பொதுவானதே..
4:20 pm
சக்தி செல்வி - இன்றைக்கு பெருகும் விவாகரத்துகளுக்குப் பின் ஆண்களின் மறு மண விகிதமும் பெண்களின் மறுமண விகிதமும் ஒன்றாய்த்தான் இருக்கிறதா ?

கண்டிப்பாக இல்லை ஒரு ஆண் விவாகரத்து பெற்றவர் என்றால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சமூகம் ஒரு பெண் விவாகரத்தானவர் எனத் தெரிந்தால் தவறு முழுவதும் அந்தப் பெண் செய்ததாக தான் இருக்கும் என நினைக்கின்றனர் அதையும் தாண்டி மறு திருமணத்துக்கு அந்தப் பெண் தயாரானால் எத்தனை ஆண்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இருக்கின்றனர் சொல்லுங்கள் எல்லாவற்றையும் மீறி மன தைரியத்துடன் தனித்து வாழ விரும்பும் பெண்களையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனோபாவம் தான் இன்றைய சமூகத்தில் உள்ளது....
4:23 pm
தமிழ்ப் பறவை - நேசன் உங்கள் கருத்திலிருக்கும் உண்மை தெரிகிறது. ஆனால் கவிதை சொல்வது அதுவல்ல.அது மேம்போக்காக அவர்கள் அப்படித்தான், இவர்கள் இப்படித்தான் எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிடுவதாகவே எனக்குப் படுகிறது...
வாரமலர், குடும்பமலர்களின் பின்னட்டைக்கவிதைகளின் உள்ளடக்கம் இதுவே...! தவறெனில் மன்னிக்க.
நான் விவாதங்களில் பின்னானவன்.
4:23 pm
Prabhakar A - பனி, மிகச் சரியாக சொன்னீர்கள். இருப்பினும் எனது நோக்கு என்ன வென்றால் .... அவங்வங்க பார்வையை முன் வைக்கிறோம். சித்திரம் முழுமையடைகிறது.

சித்திரத்தின் முழுமைக்கு இரு சாராரின் பார்வையும் அவசியம் ... அது எழுத்து செவ்வனே செய்யும். அங்கே மன்னிப்பு, தியகம் என்பதற்கு இடமே இல்லை... குறுக்காக வெட்டி பகிர்ந்து கொள்வோம். அது நம்மை சிறந்த மனிதர்களாக செதுக்க உதவலாம். :)
தமிழ்ப் பறவை - //எல்லாவற்றையும் மீறி மன தைரியத்துடன் தனித்து வாழ விரும்பும் பெண்களையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனோபாவம் தான் இன்றைய சமூகத்தில் உள்ளது//

அப்படிப்பட்ட கண்ணோட்டத்தினர் இன்னும் பழைய தலைமுறையே எனக் கூறுகிறேன்.அவர்களில் ஓரளவினர் மாறிவிட்டனர். மற்றவர்களும் வாழ்நாளுக்குள் மாறலாம் அல்லது மாறாமல் போகலாம்.எங்குக் கிளைத்தாலும், அழுத்தமாக ஊன்றி நிற்பவர்களின் வேர்களை என்ன செய்வது??? :(
4:26 pm
nesamitran online - வலி பொது என்பதில் மாற்றமில்லை , சாலையில் ஒரு பெண் வீழ்ந்தால் நீளும் கரத்திற்கும் ஆண் வீழ்ந்தால் நீளும் கரத்திற்கும் அடிப்படை மனித நேயமே .ஆனால் அது அப்படியாகத்தான் இருக்கிறதா ?

விவாகரத்து கூண்டுகளில் ,பெண்கள் காவல் நிலையங்களில் ஆணின் நிலை சொல்லித் தீராதது.

இந்த பிரதி குறித்துப் பேசுவதாய் இருந்தால் அது தன்னளவில் சரியாய்த்தான் இருக்கிறது செல்ப் போட்ரெயிட் தவறா என்ன ?
Edit4:28 pm
சக்தி செல்வி - ஆனால் பழைய தலைமுறையினருடன் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ... இன்னும் சில பல வருடங்களுக்கு பின் வேண்டுமானால் மாற்றம் நிகழலாம்4:29 pm
Prabhakar A - //அழுத்தமாக ஊன்றி நிற்பவர்களின் வேர்களை என்ன செய்வது??? ://

அது போன்ற ஒரு தெரிந்தே உறங்கும் நிலையில் இருப்பவர்களுக்குத்தான், இது போன்ற டானிக்குகள் தேவைப்படுகிறது... அந்த மென் உணர்வுகளை, அடுத்தவர்களின் உலகத்தினுள் சிறிதேனும் எட்டி பார்க்க. வெளியே வைக்காத வாக்கில் எப்படி நாம் அறிந்து கொள்வோம்...
சக்தி செல்வி - என் அம்மா ஒர் நாள் என்னிடம் பெரிதாய் அங்கலாய்த்து கொண்டிருந்தார் பெண்கள் வர வர ரொம்ப மோசமாயிட்டாங்க என... ஏன் மா என்னாச்சு ? என்றேன் ,, 10 பொண்ணுங்க ஜீன்ஸ் டி சர்ட் போட்டுட்டு வாசன் கண் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நின்று சத்தம் போட்டு சிரிச்சிட்டிருந்தாங்க டி எனக்கு பார்த்து வயிறு எல்லாம் எரியுது என்றார் பெண்கள் பொது இடத்தில் சிரித்தமைக்கே இந்த திட்டு என்றால் மற்றவைக்கு யோசித்து பார்க்கவும் ::)) அவர்களை ஒரு நாளும் மாற்ற முடியாது நாம் தான் அமைதியாய் செல்ல வேண்டும் இல்லாவிட்டால் வாய் கொழுப்பு வர வர ஜாஸ்தியாயிடுச்சு உனக்கு எனும் திட்டை சேர்த்து வாங்க வேண்டும்4:33 pm
க இராமசாமி - என்னோட பாயிண்டு ஒன்னுதான்.. பெண் சுதந்திரம் என்பது ஆண் என்பவனின் சுதந்திரத்தை அறுத்தெறிந்து விட்டுதான் பெறப்படவேண்டியதா ? என்பொருட்டு நீ நான் நினைப்பது போல் மாறவேண்டும் என்று ஒரு பெண் ஆணை நிந்திப்பது எவ்வகையில் பெண் சுதந்திரம் ஆகும் ?

//மேலும் நீங்கள் பெண்களிடம் எவ்விதமான சுதந்திரத்தை கோருகிறீர்கள்? குற்றம் சுமத்துவதில் இருந்தா ? //

குற்றம் சுமத்துரதுலல்லாம் இல்லண்னே.. நான் நானாக இருத்தல்.. அதுதான் நான் கேக்கறென்.. எனக்கு வாழ்கைல சில கொள்கைகள் இருக்கலாம் .. அத நான் மாத்திக்க விரும்பலை.. உனக்கு இருக்கற கொள்கைகள என் பொருட்டு நீ மாத்திக்க வேணாம்.. இப்படி இரு சாராரும் சிந்திக்கனும் இல்லையா. என்னய பொருத்த வரைக்கும் இந்த கவிதை ஒரு குடும்ப சூழலை மையப்படுத்தி எழுத பட்டிருக்குது.. நானும் அத பத்தி மட்டுந்தான் பேசறேன்.. நான் சொல்ல் வறது என்னோட தலைமுறைய பத்தி.. என்னோட வயசு 31.. இன்னிக்கு இருக்கற குடும்ப சூழல்ல ஆண்கள் அவர்களாகவே வாழ அனுமதிக்கபடுவதில்லை. என்னோட வயசுல மூத்தவங்களால இந்த வாதத்த ஏத்துக்க முடியாம போலாம். நீங்க பார்த்த சூழல் வேற.. நாங்க பாக்கற சூழல் வேற...
4:33 pm (edited 4:49 pm)

Prabhakar A - கரா.... இங்கே தேவை ...பரஸ்பரமான உரையாடலே நாம் அனைவருக்கும். ஈகோவை கழட்டி கதவோரத்தில் வைத்துவிட்டு. உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிப்பது. இதுதான் எனக்கு இடிக்கிற மாதிரி இருக்கிற ஒரு விசயம். உறவுகளுக்குள் உரையாடலே நிகழ்த்திக்க முடியறதில்ல.4:44 pm (edited 4:54 pm)
க இராமசாமி - சரிதான் தெ.கா ...4:48 pm
அதிகாலை பனி - பெண்கள்,ஆண்கள் இரண்டு பேருக்கும் அடிப்படை பொறுப்புகள் இருக்கு.காலம் காலமா பெண்கள் அடக்கப்பட்டாங்க ன்னு இருந்தாலும் ராமசாமி சொல்றமாதிரி ஆண்கள் நசுக்கபடறாங்க.4:55 pm
Prabhakar A - //இருந்தாலும் ராமசாமி சொல்றமாதிரி ஆண்கள் நசுக்கபடறாங்க.//

லிஸ்ட் பண்ணுங்க. தெரிஞ்சிக்கிறேன்... நானும் நசுக்குப்பட்டாலும், புரிஞ்சிக்கணும்.. சொல்லுங்க, பனி.
4:59 pm
க இராமசாமி - தெகா நான் வேணா லிஸ்ட்ட மெயில் பண்ணவா :)5:00 pm
Prabhakar A - கரா... நானும் பண்ணுவேன் ஹிஹிஹி... பரவாயில்லையா... :)) எங்குதான் இல்லை :)5:01 pm
க இராமசாமி - நான் டயர்டு ஆகிட்டேன்... அப்புறமா வரேன்... :))))5:02 pm
க இராமசாமி - <சக்தி செல்வி - என் அம்மா ஒர் நாள் என்னிடம் பெரிதாய் அங்கலாய்த்து கொண்டிருந்தார் பெண்கள் வர வர ரொம்ப மோசமாயிட்டாங்க என... ஏன் மா என்னாச்சு ? என்றேன் ,, 10 பொண்ணுங்க ஜீன்ஸ் டி சர்ட் போட்டுட்டு வாசன் கண் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நின்று சத்தம் போட்டு சிரிச்சிட்டிருந்தாங்​க டி எனக்கு பார்த்து வயிறு எல்லாம் எரியுது என்றார் பெண்கள் பொது இடத்தில் சிரித்தமைக்கே இந்த திட்டு என்றால் மற்றவைக்கு யோசித்து பார்க்கவும் ::)) அவர்களை ஒரு நாளும் மாற்ற முடியாது நாம் தான் அமைதியாய் செல்ல வேண்டும் இல்லாவிட்டால் வாய் கொழுப்பு வர வர ஜாஸ்தியாயிடுச்சு உனக்கு எனும் திட்டை சேர்த்து வாங்க வேண்டும்>


ஏங்க திட்டினது ஒரு பெண்தானே (அம்மா) .... இதுல ஆணோட தப்பு என்ன ? :))
5:05 pm
அதிகாலை பனி - தெகா,உணர்வுவயப்படாம உரையாடனும் கிறது சரிதான்.ஆனா,உணர்வுகள்தான் கவிதை,உரையாடல் எல்லாமே.பொருளாதார சுதந்திரம் கிடச்சதை பெண்கள் இன்னைக்கு சரியா உபயோகிக்கிறாங்களா?எல்லாம் பகிர்ந்துக்கணும்னு சொல்றது சரி.ஆனா எங்க விட்டு எங்க பிடிக்கணும்னு இல்லாம சீரழியற குடும்பங்கள் எத்தனை?5:07 pm
Prabhakar A - //(அம்மா) .... இதுல ஆணோட தப்பு என்ன ? //

அம்மாவிற்கு பையனா பொறந்தது.... :))) புரியுதா? சட்டச் சிக்கல், கரா ;)
5:11 pmDeleteReport spam
kayalvizhi muthuletchumi - \\ விவாகரத்து கூண்டுகளில் ,பெண்கள் காவல் நிலையங்களில் ஆணின் நிலை சொல்லித் தீராதது. // இந்த அளவுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டதால் தான் இப்ப பெண்களை எரிப்பது குறைஞ்சுருக்கு.. அதை தவறா பயன்படுத்தறவங்களை ஆதரிக்கலை..

இந்தக்கவிதை பொறுத்தவரையில் உரையாடல் நடைபெற முடியாத. அல்லது உரையாடல் நடந்தும் வலிகள் உணரப்படாத , சமமாக மதிக்கப்படாத ஒரு குடும்பத்தலைவியின் குரலாக இருக்கிறது. அழுத்தம் குடுத்து உறவை உடைக்க விரும்பாத பெண்ணாக இருக்கலாம். அது ஏன் அப்படி அடங்கி இருகனும்ன்னா.. அவங்க அம்மா அப்பாவின் மன நிம்மதிக்காக இருக்கலாம். குழந்தைக்காக இருக்கலாம். இந்த இரண்டு தளைகளிலிருந்தும் கால ஓட்டத்தில் வயதுகாலத்தில் அவள் விடுபடும் போது .. அப்படி எழுந்து போன கணவனுக்கும் அவளுக்கும் பெரிய இடைவெளி இருப்பது தெரியும்.
5:20 pm
மணி ஜி - எனக்கு இந்த கவிதை பற்றி பெரிய அபிப்ராயம் எதுமில்லை...தாமரையின் தொலைந்து போனேன்..கவிதைதான் நியாபகம் வந்தது..நான் சொல்வது கண்டெண்ட்டை...அமீபாவின் கால் என்று உருவகப்படுத்துவதால் கவிதைக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்குமா என்று எட்டவில்லை..(என் சிறிய அறிவுக்கு)5:35 pm
மணி ஜி - அம்மா சமைத்துக்கொண்டிருந்தாள்
அக்கா சமைந்து கொண்டிருந்தாள்
அண்ணன் பொறுக்கப்போயிருந்தான்
அப்பா எந்த திண்ணையிலோ...
5:42 pm
nesamitran online - பெரிய பதிவா வரும் போல இருக்கே மக்கா. :)Edit5:45 pm
க இராமசாமி - அண்ணே முடிஞ்சா இந்த கமெண்ட் எல்லாத்தயும் அங்க பிடிச்சு போடுங்கண்ணே :)5:45 pm
சக்தி செல்வி - ஏங்க திட்டினது ஒரு பெண்தானே (அம்மா) .... இதுல ஆணோட தப்பு என்ன ? :))

இதில் ஆண் தப்பு எதுவுமே இல்லைங்க காலாகாலமாய் பெண்களை அடிமைகளாகவே வளர்க்க வேண்டும் என நினைத்து வந்தார்கள் இதுவரை வளர்த்தும் வந்தார்கள் இப்போது அவர்கள் தலையெடுத்தாச்சு ஆனால் இந்த மாற்றத்தை ஆண்களால் மட்டுமல்ல இதற்கு முந்தைய தலைமுறை பெண்களாலும் தாங்க முடியவில்லை அதான் பிரச்னை
6:32 pm
க இராமசாமி - இந்த தலைமுறை ஆண்கள் பெண்களோட முன்னேற்ற்த்த வரவேறுகிட்டுதாங்க இருக்கோம்.. முந்தைய தலைமுறை ஆளுங்கல்ல சிலபேர் இன்னும் அப்படியே இருக்காங்க. (:6:35 pm
சக்தி செல்வி - க.இராமசாமி ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்ன்னு சொல்லுங்க எல்லோரும் அப்படி ஒன்றும் வரவேற்பதில்லை முடிஞ்ச அளவு அடக்கி வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர்6:39 pm
மணி ஜி - க.ரா..முதல்ல ற் போடு...6:44 pm
க இராமசாமி - இதுக்கு மேல என்னால போராட முடியலைங்க .. வாபஸ் வாங்கிகறேன் .. நீங்க நினைக்கிற மாதிரியே இருந்துட்டு போட்டும் :)6:47 pm
சக்தி செல்வி - க.இராமசாமி ::)))))6:49 pm
க இராமசாமி - எங்க மணிஜீ :)))







குட்டிப்பையா|Kutipaiya said...

நன்றி நேசன் :)

விதூஷ் - இது என் தாய் எனக்கு பாத்திரம் கவிழ்க்க சொல்லிக்கொடுத்தது குறித்ததோ நான் என் குடும்பத்தில் என்ன மாதிரியான உதவிகளைப் பெறுகிறேன் என்பது குறித்ததான வரிகளோ அல்ல. இன்னும் எத்தனை பேர் பாத்திரம் கவிழ்ப்பது போன்ற வேலைகளை மட்டுமே தம் வாழ்க்கையாக நினைத்துக் கொள்ள கட்டாயப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் அதற்கு இந்த சமூகத்தின் உடந்தையும் பிரச்சனைகளில் உதாசீனமும் அலட்சியமும் காட்டும் மனப்பாங்கு குறித்ததுமே. கடைசி வரிகள் அதற்கான குறியீடே.

நேசனின் முதல் பின்னூட்டத்தைப் போல பெண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரச்சனைகள் அதிகம் தானே குறிப்பாக நம் சமூகத்தில்! பெரும்பான்மையும் அது தானே? அதை மறுக்க முடியுமா?! இதே வாதத்தில் வைக்கப்பட்ட இன்னொரு பதிவான
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்! இதையும் விருப்பமிருந்தால் படித்துவிட்டு வாருங்கள் . அதைப் பற்றி இங்கு விரிவாக பேச வேண்டாமென நினைக்கிறேன்.

உள்ளதை எளியதாக சொல்ல வந்த முயற்சி தான் இது. நான் புரட்சியோ அதற்கான தீர்வுகளையோ சொல்ல இங்கு சொல்ல வரவில்லை. இன்னமும் உலகம் பார்க்காத, பார்க்க ஊக்குவிக்கப்படாத, அது தேவையும் இல்லை என நினைக்கக் கூடிய சமூகத்தில் வாழும் என் மத்திய, அடித்தட்டு வர்க்கத் தாய்மார்கள், சக சகோதரிகளின் உணர்வாக எழுத முற்பட்டது.

அனைவரின் பார்வைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி!

rajasundararajan said...

அமீபா, ஓர் அம்மா, ஒரு மகள், செய்தித்தாள் படிக்கிற ஒருவர் - இவர்களை உள்ளிட்டு, அம்மா பார்வையில் எழுதப் பட்டிருக்கிற காட்சி/கருத்தாக்கம்.

அமீபாவில் ஆண்பெண் உறவில்லை. தன்னைத் தானே பிளந்து இனம்பெருக்கிக் பல்குகிறது. நகர்வதற்கும் தன் உடலையே நீட்டி வளைத்துப் போலிப் பாதங்களை (pseudo pods) உருவாக்கிக் கொள்கிறது. எனவே, நம் புரிதலில், அமீபா சர்வ சுதந்திரமாக இருக்கிறது.

இனப் பெருக்கத்துக்காக ஆண் பெண் உறவுசார் நமக்கு அப்படியொரு விடுதலை சாத்தியமில்லை.

//அமீபாவின் பொய்க்காலிகளைப் போன்ற/ பெண் சுதந்திரத்தைப் பெற்ற அடிமைகள்// என்பதில், எனவே, ஒரு சுயகற்பித விடுதலையே பேசப் படுகிறது. அதற்குமேல் கிண்டிக் கிளற ஏன் சுரண்டக் கூட ஒன்றுமில்லை என்கிறது, //நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி// என்னும் அடி.

'தமிழ்ப் புத்தகத்துப் பெண் சுதந்திரம்' என்றொரு சலிப்பின் வெளிப்பாடும் இடையில் வருகிறது. 'தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்' அனைய பெண்கள் நம் நினைவை இடறுகிறார்கள்.

//திரும்பிப் பார்த்தேன்// என்பதில் அவ்வேளை நிகழ்வு மட்டுமன்று, வரலாறு மொத்தமும் வினவப் படுகிறது.

//சும்மா உட்கார்ந்து செய்தித்தாள்
படித்துக்கொண்டிருந்தவரும்
சட்டையை மாட்டிக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தார்!//

'சும்மா இருத்தலே சுகம்' என்றொரு தத்துவக் கோட்பாடு நம் பண்பாட்டில் உண்டல்லவா? 'சும்மா உட்கார்ந்து செய்தித்தாள் படித்தல்' என்பது, தியானத்தில் அமர்ந்து ஞானம்பெற முயல்வதின் கேலிச் சித்திரமோ?

வெற்றுடம்பு = கவிழ்த்த பாத்திரம். அதைச் சட்டையிட்டு மறைக்கிற குற்ற உணர்வு.

வெளியேறுதல் = தப்பித்தல் (விடுதலை கற்பித்தல்).

வெட்கமாக இருக்கிறது: நம்மிடம் ஸ்ருதி, ஸ்ம்ருதி, சூக்தங்கள் உண்டு; ஆண்-பெண்-சந்ததி அமைப்பில் விடுதலை இன்னதென்ற விவரம் உண்டா?

//பெண் சுதந்திரம் பற்றிய பாடமொன்றை
படிக்கத் தொடங்கினாள்;
அதில் ஆர்வம் இல்லாமல்
உலக வரைபடத்தை எடுத்துவைத்துக்கொண்டு
ஆராய்ந்தாள்//

இப்படித்தான் இருக்கிறது ஓரொரு குழந்தையின் முன்னும் காலம்.

சீதாபாரதியின் ‘அமீபாவின் கால்களும்’ வாசகப் பார்வைகளும்

அமீபாவின் கால்கள்

ம‌க‌ள் அறிவிய‌ல் உண்மைக‌ள்
ப‌டித்துக் கொண்டிருந்தாள்
அமீபா ஒர் செல் உயிரி
அமீபாவுக்கென்று த‌னி உருவ‌ம் இல்லை
அமீபாவுக்கு கால்க‌ள் கிடையாது
த‌ன் உருவ‌த்தின் நீட்சியாக‌
கால்க‌ள் போன்ற‌
பொய்க்காலிகளைக் கொண்டது
அம்மா கேட்டியா’வென‌
ஆச்ச‌ரியப்ப‌ட்டுக் கொண்டாள்

பின் த‌மிழ்ப்புத்தகத்தை எடுத்து
பெண் சுத‌ந்திர‌ம் ப‌ற்றிய பாடமொன்றை
ப‌டிக்க‌த் தொட‌ங்கினாள்

அதில் ஆர்வ‌ம் இல்லாம‌ல்
உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தை எடுத்துவைத்துக்கொண்டு
ஆராய்ந்தாள்
ஆப்பிரிக்காவில் அடிமைக‌ள் இருக்கின்ற‌ன‌ராமே
உண்மையா அம்மா என்றாள்

அமீபாவின் பொய்க்காலிக‌ளைப் போன்ற‌
பெண் சுத‌ந்திர‌த்தைப் பெற்ற அடிமைக‌ள்
எங்கேயும் உள்ள‌ன‌ர் என்றேன்
நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி

போம்மா ஒண்ணும் புரிய‌லை
என‌ விளையாட‌ ஒடிவிட்டாள்
திரும்பி பார்த்தேன்
சும்மா உட்கார்ந்து செய்தித்தாள்
ப‌டித்துக்கொண்டிருந்த‌வ‌ரும்
ச‌ட்டையை மாட்டிக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தார்!



வாசகப் பார்வைகள்



விதூஷ்  அவரது தாய் அவருக்கு சின்னவயசிலேயே ஒருவேளை "பாத்திரம் கவிழ்த்து வைக்க" சொல்லித் தராமல் இருந்திருந்தால், மனைவி கணவனிடம் வேலையைப் பகிர சொல்லலாம் என்றே நினைக்கிறேன். குடும்ப அமைதி அது இதுன்னு கம்ம்னு இருந்துட்டு, கவிதையாய் புலம்பரதில் என்ன பிரயோஜனம்.9:54 am (edited 9:54 am)
லதாமகன் . - இந்த புலம்பல்ல எனக்கும் எதிர்கருத்துதான். இருந்தாலும், கவனிக்கப்படவேண்டிய ஆளுங்கல்ல சீதாவும் ஒருத்தர்னு நினைக்கிறேன். தளத்த படிச்சுப்பாருங்க விதூஷ்9:59 am
                 விதூஷ்  - - சீதாம்மா எழுதுவதை ஏற்கனவே படிக்கிறேன். ஏதோ ஒரு     கையாலாகாதத்தனம் தெறிக்கும், எங்க பாட்டியின் குரல் போலவே. வேற வழி, பொருத்துக்கிறேன் என்பதான பெண்மையின் குரல். செவிமடுக்கலாம், கையை பிசைந்து கொண்டு கவலைப் படலாம், வீட்டுக்குள் நுழைந்து சவுக்கால் அடிக்க முடியுமா.. அதற்கு இவர்களே (ஆசிரியர் அல்ல, இவர்கள் கவிதையில் எழுதி / பேசி இருக்கும் பெண்கள்) அனுமதிக்க மாட்டார்கள்.

காய்ந்த சருகுகள் உடைவதைப் போல
நொறுக்கி விட்டு போயிருக்கிறாய்
உன் காலடியில்
என் கண்ணாடி உணர்வுகளை..
அப்போதும் தம் கூர்முனைகளை
மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றன
உன் பாதங்கள் கீறிவிடாத படிக்கு...


வாசகசாலை :

இந்தக் கவிதை குறித்து பேச இன்னும் இருக்கிறதாய் தோன்றுவதால் இங்கு பகிரப் பெறுகிறது.இந்த உத்தி ஞானக்கூத்தனின் கவிதைகளிலும் பசுவைய்யா கவிதைகளிலும் எஸ்.வைதீஸ்வரனின் கவிதைகளிலும் பயனுற்று இருந்த போதும் அது சுயம் மற்றும் புறச் சமூகம் சார்ந்து புழங்கி வந்தது. பெண் விடுதலை சந்ததி வழியான சொல்முறையில் இயல்பாக வெளிப்பட்டிருப்பது கவனத்திற்குரியது எனக் கருதலாம் .பார்வைகள் வரவேற்கப் படுகின்றன.

நன்றி : லதாமகன்,விதூஷ் 

Wednesday, August 24, 2011

கவிஞர் பா.ராஜாராமின் கவிதையும் கவிஞர் ராஜசுந்தரராஜனின் கருத்துரையும் ...


"சரித்திரம்"


ல்லாவற்றையும் இழக்க
ஒரு மனசு வேணும்.

ழங்கவும்.

ம்மனசிடம் ஒரு குரல் உண்டு
கரகரவென்கிற உப்புக் குரல்.

கேட்க விருப்பமா?

ழுந்து நடங்கள்.

ளரவமற்ற பாலத்தை
தேர்வு செய்யவும்.

டர் நிசியெனில் நல்லது.

புகைவண்டி நேரங்களை
குறித்து வைத்திருப்பீர்கள் எனில்
உத்தமம்.

பாலத்தில் ஏறி நின்று
புகை வண்டி வருகிறதா எனப் பார்க்கவும்.
போதும்.

வ்வும் முன்பு கேட்டீர்களா?

ங்கள் தலையை வாங்கிய தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ.

குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.





கவிஞர் ராஜசுந்தரராஜனின் கருத்துரை 



கவிஞர்கள் பெரிதாகத் திட்டமிட்டு எழுதுவதில்லை. அவர்கள்பாட்டுக்கு எழுதுகிறார்கள். வாசகர்கள்தான் அதைப் பண்ணிப்பண்ணி வாசிக்கிறார்கள்.

ஆனால் எல்லா எழுத்தையும் அப்படிப் பண்ணிப்பண்ணி வாசித்துவிட முடியாது. பொம்மை பிடிப்பதற்கு வாகான களிமண் (கவனியுங்கள், ஞானம் அல்ல; களிமண்) எழுத்தில் இருக்க வேண்டும்.

தற்கொலைக்கு முன்னுகிற ஒரு தருணத்தைப் பற்றிய கவிதை இது.

அதற்கு இசைவாகவே, //எல்லாவற்றையும் இழக்க
ஒரு மனசு வேணும்// என்று, அது என்னவோ நேர்முறையான ஒரு விசயம் போல, தொடங்குகிறது கவிதை.

//வழங்கவும்// என்பது //இழக்க// என்பதின் எதிர்மறை என்றாலும், இங்கே, இதுவும் நேர்முறைப் பொருளின் தொனியிலேயே நிற்கிறது (காரணம், இரண்டு சொல்லாடல்களும் 'ஈதல்' என்னும் அறச்செயல் மனப்படிவில் சமன்படுவதால்).

//கரகரவென்ற உப்புக் குரல்// இதில், 'உப்பு' என்னும் சொல்லிடுகையின் பொருத்தமும் அருமையும்... என்ன சொல்ல!

||நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்|| (மத். 5:13) என்பது இயேசுவின் வார்த்தை. அதன் பொருள், ‘உலகவழக்கில் எளிமையும் பயனும் உள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும்’ என்பது. இப்போது பொருத்திப் பாருங்கள்:

//தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்,
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ -

குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.//

'அடர்நிசி' இருண்மையைத் துணைக்கோடல். ஆனால், 'பாலம்' இரு கரைகளையும் இணைக்கிற ஒரு கட்டுமானம்; 'புகைவண்டி' அதில் இயலும் செயல்பாடு.

களிமண் இருக்கிறதா, இல்லையா?
ஆ! விடுபட்டுவிட்டது:

'ஈதல்', 'ஈனுதல்' இவை 'ஈ' என்னும் வேர்ச்சொற் பிறந்து, 'இழத்தல்' 'வழங்கல்' என்றும் பொருள் தருவன ஆம்.

'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்பதில் எதிர்மறையாக இயலும் 'தலைவாங்கிய', //உங்கள் தலையை வாங்கிய தாதிப்பெண்// என்பதில் நேர்முறையாக மாறி இயல்வதைக் கவனியுங்கள்!

கவிஞர் என்னமா வெளையாடியிருக்காரு! 

அறிமுகம்

புதிய படைப்பாளர்களை அடையாளப் படுத்தவும் ,படைப்புகளின் மீதான ஆக்க பூர்வமான பார்வைகளையும் பகிரவும் இத்தளம் துவங்கப் பெற்றிருக்கிறது. படைப்புகள் குறித்த பரிந்துரைகள்,மொழிபெயர்ப்புகள் குறித்த கவனப் படுத்துதல்கள் வரவேற்கப் படுகின்றன.படைப்புகள் கதை,கவிதை, கட்டுரை, ஓவியம், நாவல் அறிமுகம் என எல்லா வகைமைகளிலும் அமையும்.

ஆர்வலர்களின் தொடர்ந்த பங்களிப்பே ஊக்கமும் உற்சாகமும் வழங்கக் கூடும்

நன்றிகள் !