Wednesday, November 16, 2011

ரெய்னர் மரியா ரில்கே- வின் கவிதையும் மூன்று கவிஞர்களின் மொழிபெயர்ப்பும்

கவிஞர் அனுஜன்யா


சாருவுக்குப் பிடித்த ரய்னர் மரியா ரில்கேவின் 'மீண்டும் மீண்டும்' கவிதையும் ..என் மொழிபெயர்ப்பு முயற்சியும். 

Again and again, however we know the landscape of love
and the little churchyard there, with its sorrowing names,
and the frighteningly silent abyss into which the others
fall: again and again the two of us walk out together
under the ancient trees, lie down again and again
among the flowers, face to face with the sky.

(Rainer Maria Rilke)மீண்டும் மீண்டும் - 

காதல் தேசத்தையும்

தேவாலய வெளியின் 

சோகம் சுமந்த பெயர்களையும் 

பயங்கர மௌனப் பாதாளத்தில் 

மற்றவர் வீழ்வதையும் 

நாம் எவ்வளவு அறிந்தாலும், 

மீண்டும் மீண்டும் -

நாமிருவரும் சேர்ந்து நடப்போம் 

புராதன மரங்களுக்குக் கீழ் 

மலர்களுக்கிடையே 

வானத்தை நேர்கொண்டு 

படுத்தபடியே - மீண்டும் மீண்டும்
கவிஞர் ராஜசுந்தர ராஜன் 


மீண்டும் மீண்டும் 
காதல் நிலவெளியையும் அதில் ஆங்கே 
துயருறுத்தும் பெயர்களொடு இடுகாட்டையும்
பிறர் வீழ்ந்துபடும் 
அச்சம்தரும் ஊமை ஆழத்தையும் 
அறிவோம் ஆயினும், 
மீண்டும் மீண்டும் 
நாம் இருவரும் ஒருமித்திறங்கி 
முதுமரங்களின் தாழே நடக்கிறோம்;
மலர்களுக்கிடையே படுக்கிறோம் மீண்டும் மீண்டும்,
வானோடு முகாமுகமாக.


கவிதாயினி பத்மஜா நாராயணன் 


எவ்வளவுதான்,
ற்றவர்கள் வீழும் ,
துயர்தரும் பெயர்களை சுமக்கும் ,
அம் மயான பூமியுள்ள ,
அச்சுறுத்தும் ,அமைதிப் படுகுழியான
காதலின் நிலப் பரப்பை
நாமறிந்திருப்பினும்,
மீண்டும் மீண்டும்
அக் கிழ மரங்களின்
கீழ் நடந்து
மீண்டும் மீண்டும்
மலர்களிடை கிடந்தது
வானத்தோடு ஒர்முகமாகிறோம்
கூகுள் பஸ்ஸில் ஓர் உரையாடலின் போது நண்பர் கவிஞர் அனுஜன்யா துவக்கி வைத்த மொழிபெயர்ப்பு விளையாட்டை வெகு அழகாய் தொடர்ந்த கவிஞர் ராஜசுந்தரராஜன் அவர்களுக்கும் கவிதாயினி பத்மஜா நாராயணன் அவர்களுக்கு வாசகசாலை நன்றிகளை சமர்பிக்கிறது .

3 comments:

rajasundararajan said...

பத்மா, எனக்கு இதை மொழி பெயர்க்கும் ஆர்வமெல்லாம் இல்லை. அனுஜன்யா, churchyard என்பதற்கு எடுத்துக் கொண்ட பொருளில் உடன்பாடில்லை. அதனால் அதை மட்டும் சுட்டலாம் என்றிருந்தேன். சரி, சும்மாதானே இருக்கிறோம் என்று முழுக் கவிதையையும் பண்ணிப் பார்த்தேன்.

நேசமித்ரன் சுட்டிக்காட்டியது போல உங்கள் 'மலரிடை கிடந்து' பொருத்தமாக இருக்கிறது, ஏனென்றால், மரணித்து மலர்கள் சார்த்தப்பட்ட உடலையும் குறிக்கிறது அநத அடி.

அனுஜன்யா said...

ராசு அண்ணே!

மோதிரக் குட்டுக்கு நன்றி. சாருவின் தளத்தில் இந்தக் கவிதையின் ஆங்கில வடிவத்தைப் படித்து அசிரத்தையாக
மொழி பெயர்த்தேன். அதான் பல்லிளிக்கிறது. உங்கள் கவிதை நல்லா வந்திருக்கு - ஆனால் எனக்குக் கைவராத இறுக்கமான மொழியில்.

"A churchyard should not be confused with a graveyard or a cemetery. While churchyards were historically often used as graveyards, they can also be any patch of land on church grounds, even without a place of burial" என்ற விக்கியின் வாசகங்களால் நேரிடையாக இடுகாடு என்றில்லாமல் 'தேவாலய வெளி' என்று சற்று பூடகமாகச் சொல்ல விழைந்தேன். மேலும் இடுகாடு என்பது மதம் தாண்டிய பதமாகவும் "தேவாலய வெளியின் சோகம் சுமந்த பெயர்கள்' பூடகமாக கிருத்துவ இடுகாட்டைச் சொல்வதாகவும் எண்ணிக்கொண்டேன். மூல மொழியில் எப்படி எழுதப்பட்டது என்று தெரியவில்லை. இந்த மொழியாக்கங்கள் எப்போதுமே மற்றொருவர் உடையை நாம் அணிவது போலத்தான்.

அபத்தமாகவாவது எழுதி உங்கள் கவன ஈர்ப்பு பெற்றது ஈவு. மற்றவை மீதி :)

rajasundararajan said...

அனு,
முமபையில்தானே இருக்கிறீர்கள்? பாந்(த்)ராவில் கடற்கரையை ஒட்டி வடகோடியில் ஒரு சர்ச் இருக்கிறது. (பெயர் நினைவில் இல்லை). அதற்குள் ஒருமுறை போய்ப் பாருங்கள். ஆலயத்துக்கு உள்ளும் பிரார்த்தனைக்கு நிற்கும் நம் காலடியின் கீழ் தரை முழுக்கக் கல்லறைப் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். அதன்மேல் நிற்க எனக்குக் கூச்சமாக இருந்தது.

Churchyard-கு நீங்கள் கொடுத்துள்ள (அல்லது விக்கி) விளக்கம் நான் அறியாதது. பள்ளிக்கூடத்தில் படித்த Wordsworth பாடலொன்றில் இவ் வார்த்தைக்கு, சர்ச்சை ஒட்டிக் கிறிஸ்த்தவர்களைப் புதைக்கும் வெளி என்று ஆசிரியர் கூறிக் கேட்டதுண்டு. அதற்குமேல் எனக்கு ஒன்றும் தெரியாது. இந்தக் கவிதை, சாதல் சாதல் சாதல்/ சாதல் ஆயினும் சாதல் ஆயினும்/ காதல் காதல் காதல்! என்னும் பொருள் உணர்த்துவதால் 'இடுகாடு' என்று பெயர்த்தேன். கிறிஸ்த்தவ நாட்டில் எழுதப்பட்டது என்றாலும் மொழிபெயர்ப்பில் நமக்கும் பொருந்தவேண்டும்தானே?

இதோ மூலமும் அதன் இன்னோர் ஆங்கிலப் பாடமும்:

1289: Time and Again | Rainer Maria Rilke

"Immer wieder"
Rainer Maria Rilke

Immer wieder, ob wir der Liebe Landschaft auch kennen
und den kleinen Kirchhof mit seinen klagenden Namen
und die furchtbar verschweigende Schlucht, in welcher die anderen
enden: immer wieder gehn wir zu zweien hinaus
unter die alten Bäume, lagern uns immer wieder
zwischen die Blumen, gegenüber dem Himmel.


Translated from the German

"Time and Again"
Rainer Maria Rilke

TIme and again, however well we know the landscape of love,
and the little church-yard with lamenting names,
and the frightfully silent ravine wherein all the others
end: time and again we go out two together,
under the old trees, lie down again and again
between the flowers, face to face with the sky.