Showing posts with label கதையியல். Show all posts
Showing posts with label கதையியல். Show all posts

Monday, December 5, 2011

எஸ்.ரா-வின் அன்னா ஏன் தற்கொலை செய்தாள்? கட்டுரையை முன் வைத்து ....





தொடர்புடைய சுட்டி ...http://www.sramakrishnan.com/?p=2692


bogan R - அற்புதம்.இந்த நாவல் எழுப்பும் கேள்விகளுடன் (மேடம் போவரியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்) பல நாள் முட்டிக் கொண்டிருந்தேன்.எதனால் நம்மால் 'அவர்கள் அதன்பிறகு எப்போதும் அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்தார்கள்'என்று சொல்லவோ எழுதவோ முடியவில்லை?ஏன் எல்லா இடத்திலும் இதனால் அதிகம் பாதிக்கப் படுகிறவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்?அல்லது அவ்விதம் காண்பிக்கப் படுகிறார்கள்?கடைச்யில் எப்படி அவர்களை அவர்களது 'குற்றம் 'தேடிப் பிடித்துக் கொன்றுவிடுகிறது?இந்த வகையில் உலக சரித்திரத்திலேயே எனக்குத் தெரிந்து அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்த ஒரே புரட்சியாளன் பகவான் கிருஷ்ணன்தான் ))12/1
rajasundararajan - - எழுத்தாளர் என்ன கருத்தைக் கடத்துவத்ற்காக எழுதுகிறாரோ, அன்ன கருத்து அப்படியே வாசகரைச் சென்று சேர்ந்துவிடும் என்று உறுதி சொல்ல முடியாது. (இது குறித்து, bogan R - Buzz - "எப்போதும் போல இந்தக் கவிதையின் மறுநுனி உங்கள் கையில் இருக்கிறது..." என்னும் கவிதை கூடப் பேசுகிறது.)

ஆகவே, எஸ்.ரா. அவர்கள் 'அன்னா கரேனினா' பற்றிப் பேசியதாக இங்கு பதியப் பெற்றிருக்கும் கருத்தும் ஏற்கப்பட வேண்டியதே - அது தோல்ஸ்த்தோய் கடத்த மெனக்கெட்ட கருத்தாக இல்லாமல் எஸ்.ரா.வின் வாசிப்பின் வழி வந்ததாக இருக்க நேர்ந்தாலும்.

சரி, இது வழி, எஸ்.ரா. தமிழ்ச் சமூகத்துக்கு என்ன சொல்ல விழைகிறார்?

//நிராசை அல்லது குற்றவுணர்வு அல்ல, வாழ்வின் பொருளின்மை குறித்த எண்ணம் தான் அன்னாவை தற்கொலைக்கு நகர்த்துகிறது.//

//அவள் மிக அதிகமாய் வெறுக்கும் விரான்ஸ்கியை தான் மிக அதிகமாக நேசிக்கவும் செய்கிறாள். அவள் பிரச்சினை அதுதான். அதன் ஒரே தீர்வு மரணம் என்று முடிவு செய்கிறாள்.//

இதன் வழி, 'வெறுப்பதும் நேசிப்பதும் = வாழ்வின் பொருளின்மை' என்றாகிறது.

ஆக, "ஒன்று வெறு அல்லது நேசி; இரண்டையும் ஒட்டுக்காச் செய்து வாழ்வின் பொருளின்மைக்குப் போய்விடாதே - தற்கொலைக்கு இட்டுச் செல்லும்" என்கிறார் எஸ்.ரா.

[//சாகும்முன் அவள் தூங்கும் விரோன்ஸ்கியைப் பார்த்து அவன் மீது அளப்பரிய அன்பை உணர்கிற காட்சியை//

இப்படி ஒரு காட்சி நாவலில் உண்டோ? (இதெல்லாம் மாமல்லனுக்கே வெளிச்சம்!)]

அன்னா வ்ரோன்ஸ்கியை வெறுப்பதில்லை; தன்னலம் மிக்கதோர் ஊடலை நிகழ்த்துகிறாள் என்பதே என் வாசிப்பு (இந்த நாவலில் யாரும் யாரையும் வெறுப்பதில்லை என்பதும்). அது கிடக்கட்டும்.

July 12th (1852)

The desire of the flesh is personal good. The desire of the soul is the good of others. One cannot decline to admit the immortality of the soul, but one can decline to admit the soul's annihilation. Even if the body be distinct from the soul, and undergoes annihilation, what is there to prove annihilation also of the soul? Suicide is the most impressive expression and evidence of the soul; and the existence of the soul is a proof of its own immortality. I have seen that the body dies: hence I presume that my own will die. But there is nothing to show me that the soul dies: wherefore I say that it is immortal, according to my own ideas. The idea of eternity is a disease of the intellect. Going to bed after lo.

Diary of Tolstoy, P 185
12/1 (edited 12/1)
rajasundararajan - - //சரித்திரத்திலேயே எனக்குத் தெரிந்து அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்த ஒரே புரட்சியாளன் பகவான் கிருஷ்ணன்தான் ))//

வாழும் புரட்சியாளர்கள் உண்டே: சினிமாக்காரர்கள் சிலர், செவ்வாய் உச்ச அரசியல் முதுகுரவர் ஒருவர்!
12/1
nesamitran online - நன்றிகள் போகன், நன்றிண்ணே

விவாதங்கள் சுவாரசியமாய் இருக்கின்றன. மேலும் வளர்ந்தால் வாசக சாலையில் பகிரலாம்
Edit12/1
bogan R - முதிர் குரவர் அடல்டரியில் வாழுகிறார் சரி.ஆனந்தமாக இருக்கிறாரா என்ன?))12/1
rajasundararajan - - வாழ்வா சாவாதான் பேச்சு. கிருஷ்ணனைப் பற்றிய மகாபாரதக் கதையில் இதெல்லாம் கிடையாது. அப்புறமா வந்த புராணங்கள்லதான் - அதுவும் பொண்ணுங்கதான் லவ்வுதுங்க; ஒன்னும் நடந்தாமாதிரித் தெரியலை. ஆனா கிரேக்கக் கடவுள்களெப் பாருங்க, சும்மா புகுந்து விளையாடியிருக்காங்க.

பொண்டாட்டிகள்லாம் எப்படி அடல்ட்ரில வருவாங்க? அவரெ விடுங்க. இங்லீஸ் தலைப்பு வெச்சு நாவல் எழுதுற தமிழ் எழுத்தாளர் ஓ.கே.யா?

சரி, பிரச்சனைக்கு வருவோம். அடல்ட்ரியினால் வரும் இக்கட்டுகள், உணர்வு காரணமாகவும் உலகு காரணமாகவும் வரலாம். உலகு காரணமாக வந்தாலும் அதையும் நாம் உணர்வுக்கு மொழிபெயர்த்தே மதிப்பிடுகிறோம். வ்ரோன்ஸ்கி தனக்கென்று ஒரு லட்சியத்தைத் தேடிக் கொள்வது, சுயமுக்கியத்துவம் பார்க்கும் அன்னாவுக்கு, தான் கழித்துக்கட்டப் படுவதாகப் படுகிறது. இவ்வளவுதான் விசயம்.

//விரோன்ஸ்கி ஒழுக்கத்தை மீறினாலும் அதனை நேர்மையாக எதிர்ப்பவன் அல்ல, அவன் ஒழுக்கத்துடன் வாழ்வின் இருண்மையுடன் ஒரு விட்டில் போல் விளையாட மட்டுமே விரும்புபவன். அதனாலே தல்ஸ்தோய் அவனைக் குற்றவுணர்வில் வாடுபவனாகக் காட்டுகிறார்.//

('இருண்மையுடன் ஒரு விட்டில்பூச்சி' என்னும் உருவகமெல்லாம் கட்டுரையாளருக்கு உரியது. எஸ்.ரா.வுக்கு சம்பந்தமில்லை.)

வ்ரோன்ஸ்கி, மன்னரின் பாதுகாப்புப் படையில் செல்வாக்கு உள்ளவன். அதனால் இயல்பாகவே சமுகப் பார்வைக்கு மதிப்புக் கொடுப்பவன். அன்னாவோடு அவனுக்குக் கள்ள உறவொன்றும் கிடையாது. அவன் அவள் வீட்டுக்குள் புகுந்து உறவாடவில்லை. அவளைத் தன் வீட்டுக்குக் கொண்டுசென்று வாழ்க்கை நடத்துகிறான்; வெளிநாட்டுக்கு - வெனீசுக்கு - உல்லாசப் பயணம் கூட்டிக்கொண்டு போகிறான். அவளை விட்டு வேறெவளிடமும் தாவாமல் கடைசிவரை அவள்பால் காதலாக இருக்கிறான். கட்டுரையாளர் 'வ்ரோன்ஸ்கி' குணவார்ப்பைக் கொச்சைப் படுத்துகிறார்.

அன்னாவுடைய வாழ்க்கைப் பயணத்தையும் லெவினுடைய வாழ்க்கைப் பயணத்தையும் குறுக்கு முரண் (cross) ஆக்கிப் பார்க்க வேண்டும். அன்னா தற்கொலை செய்துகொண்ட பிறகும் ஒரு கூடுதல் புத்தகமாக லெவினுடைய கதை ஏன் வளர்க்கப்பட்டிருக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

எஸ்.ரா. நன்றாகத்தான் பேசியிருப்பார். ஆனால் அவர் தன் ஞாபகங்களில் இருந்து பேசுவதால் இன்னின்ன தகவல்களில் வழுவினார் என்று நமக்குத்தான் பிரித்தறியத் தெரிந்திருக்காது. அவ்வளவு பெரிய நாவலை வாசித்து நம்மை அணியப்படுத்த நமக்க்கெல்லாம் பொறுமை இருக்கிறதா என்ன?
12/1 (edited 12/1)
Joe Anand - //சரித்திரத்திலேயே எனக்குத் தெரிந்து அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்த ஒரே புரட்சியாளன் பகவான் கிருஷ்ணன்தான் ))//

போகன் கருத்து குறித்து மதுபான விருந்தொன்றில் பேசினேன், மதவெறியற்ற நண்பர்கள் என்பதால் என் தலை தப்பியது ;-)
12/1 (edited 12/1)
bogan R - என்னைப் பொறுத்தவரை அடல்டரி என்பது இன்னொருத்தர் மனைவியோட அல்லது புருசனோட நைசா பேசி சல்சா பண்றது..(சல்சா பண்ண தெம்பில்லாமல் நைசா பேசிக் கொண்டே மட்டுமே இருக்கிற ரொம்ப சாதா அடல்டரியில் இருந்து புருஷன் அல்லது மனைவி முன்னாலையே இன்னொருவருடன் இழைகிற ஆசிட் அடல்டரி வரை நிறைய கிரேடுகள் உண்டு.மனதிலோ உடலிலோ அடல்டரி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.வெகு சிலரே அதை எல்லை வரைத் துரத்திக் கொண்டு போகிறார்கள்.

கிருஷ்ணன் தனது அடல்டரியை consummate பண்ணவில்லை என்கிறீர்களா...பாலகுமாரனும் ஏறக்குறைய அப்படித்தான் சொல்கிறார்.ஆனால் அடல்டரி விசயத்தில் பாலகுமாரனை விட பாகவதம் சொல்வதையே நம்புகிறேன் .பாலகுமாரனின் பின்கதைச் சுருக்கம் அவ்வளவு சரியில்லை என்பதும் ஒரு காரணம் .மீராவும் ராதாவும் ஒன்றில்லை.ராதா கிருஷ்ணா உறவு full scale adultery தான்.என்ன அது divine adultery.

புராணங்களைப் போலவே பழைய ஏற்பாட்டை நுணுகிப் படிக்கும் இன்றைய ஒழுக்க வாதிகளும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்.சோதோம் நகருக்கு ஆபிரகாமைப் பார்க்க்க வருகிற தேவர்களை ஓரினச் சேர்க்கைக்குத் தரும்படி அங்குள்ளவர்கள் சூழ்ந்துகொண்டு கேட்க ஆபிரகாம் திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார்.அடுத்து அவர் போடுவதுதான் அணுகுண்டு.வேண்டுமெனில் கன்னி கழியாத எனது இரண்டு மகள்களைத் தருகிறேன் .அவர்களை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்கிறார்!அதே போல் தகப்பனை 'மயக்கி 'அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள் பற்றி விவிலியம் சொல்கிறது..

ஆகா மதங்களில் எவ்வளவு அசிங்கம் பார்த்தீர்களா என்ற மன நிலையில் இதைச் சொல்லவில்லை .நம் ஒழுக்கங்கள் எவ்விதம் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன என்பதற்காய் சுட்டிக் காட்டினேன்.கிருஷ்ணனுக்கு மனத் தடைகளே இல்லை.அவனுக்கு முடிவுகளே முக்கியம்.வழிமுறைகள் அல்ல.அவை காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் என அவன் அறிந்திருந்தான்.ராமனுக்கு மனைவியைக் காதலிப்பதில் கூட மனத் தடைகள் இருந்தன.ராவணனில் இருந்து வண்ணான் வரை குறுக்கே வந்து கொண்டே இருக்கிறார்கள்..அவனுக்கு தர்மம் என்று சொல்லப் பட்ட சரியான வழிகளில் சரியான வேகத்தில் போய் சரியான நேரத்தில்தான் சரியான எதையும் அடைந்து தீரவேண்டும்.Poor boy!

அவன் மனைவி மேல் ராவணனுக்கு ஆசை கொள்ளத் துணிச்சல் வந்ததில் ஆச்சர்யமென்ன?எப்படியும் அவன் 'தர்மத்தின் வழி 'வானரப் படையெல்லாம் திரட்டி வருவதற்குள் விடிந்துவிடும்.அதற்குள் she is worth a try என்று அவன் நினைத்திருக்கலாம்.அம்மணி படு காத்திரமாய் அறத்தின் மீது சப்பணமிட்டு அமர்ந்திருந்ததால் ராமன் தப்பித்தான்.அகலிகை போல் கணத்தளர்ச்சி கூட அவளுக்கு நேரவில்லை.அதுதான் மேட்டர்.So who is the hero?

கிருஷ்ணனிடம் இதையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.மாறாக மண்டோதரியை எங்கே கிருஷ்ணன் தூக்கிப் போய்விடுவானோ என்ற கவலையிலேயே ராவணின் பத்து தலைகளும் உதிர்ந்திருக்கும்!
12/2 (edited 12/2)
bogan R - இன்னும் நிறைய பேசலாம் .அலைபேசியில் எனது ஆபிஸ் தோழி அழைக்கிறாள்.நானும் கொஞ்சம் அடல்டரி செய்ய வேண்டி இருக்கிறது.ஆகவே பிறகு வருகிறேன்.காலை எழுந்த உடன் காபி.பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல அடல்டரி என்ற பாடலுடன் ......12/2
Joe Anand - I was reminded about the movie "Year One" after Bogan mentioning the sin city Sodom & Abraham. It's a fab parody of a lot of stories from the old testament.12/2
rajasundararajan - - இயேசு கிருஸ்த்துவின் வம்சாவழியிலேயே பர-ஒழுக்கம் உண்டென்று காட்டப் படுகின்றது: and Judah the father of Perez and Zerah by Tamar, and Perez the father of Hezron, and Hezron the father of Ram, 4 and Ram the father of Amminadab, and Amminadab the father of Nahshon, and Nahshon the father of Salmon, 5 and Salmon the father of Boaz by Rahab, and Boaz the father of Obed by Ruth, and Obed the father of Jesse, 6 and Jesse the father of David the king. And David was the father of Solomon by the wife of Uriah,

Tamar, Rahab, Uriah. இவர்களில் தாமார், கணவரின் தந்தையை(மாமனாரை)க் கூடுபவள். ராஹாப் ஒரு விலைமகள். அடைக்கலம் கொடுத்தமைக்காகப் பின்னாளில் வரிக்கப் படுபவள் (இது அடல்ட்ரி இல்லை எனலாம்). உரியாவின் கணவனைச் சதிசெய்து கொன்றுபோட்டு தாவீது அவளை மணந்துகொள்கிறான்.

இது ஏன் சொல்லப் படுகிறது என்றால், /முடிவுகளே முக்கியம். வழிமுறைகள் அல்ல/ என்பதனை வலியுறுத்தவே. /கிருஷ்ணனுக்கு மனத் தடைகளே இல்லை.அவனுக்கு முடிவுகளே முக்கியம். வழிமுறைகள் அல்ல. அவை காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் என அவன் அறிந்திருந்தான்./ இதோடு நான் உடன்படுகிறேன். என்றால், ||கர்மணி ஏவ அதிகாரஸ் தே மா ஃபலேஷு கதாச்சன...|| என்பதினைக் கிருஷ்ணன் கூறி இருக்க முடியாது என்றும் விளங்குகிறது அல்லவா?

இராமனைப் பற்றிக் கூறுகையில், பண்படுத்தப்பட்ட இராமாயணக் கதையையே மேற்கோள் காட்டுகிறோம். மணிரத்னத்தின் "இராவணன்" படத்துக்கு ஆதாரமான ஒரு வரலாற்றுப் பார்வை இருக்கக் கூடும் என்று யோசித்து இருக்கிறோமா? அதாவது இராவணனை tempt செய்வதற்காகவே இராமன் சீதையை இராவண ஆட்சிப் பகுதிக்குள் (லங்க்கா, தென்னிலங்கை அல்ல; நர்மதோத்ரிப் பகுதி) கொண்டு நுழைகிறான். (இது முனிவர்கள் வகுத்துத் தந்த திட்டம் என்றும் சொல்லப் படுவதுண்டு). ஆனால், சீதையோ மண்ணின் மகள். நிலம்போல அசையாதவளும் கூட. "இராவணன் என்னை அவன் தாய்போலவே மதித்துக் காத்தான்" என்னும் எதிராளிப் புகழ்க் கூற்றுக்கு எரிச்சற்பட்டே அவளுக்குத் தீ வைக்க்கப் படுகிறது. சந்தேகப் பட்டு அல்ல.

இராமன் வாலியைக் கொன்றதும் சரியே - ரிக் வேத நியமத்தின் படி (தீர்க்கதமஸ் பிறந்த கதை). அதாவது, 'அண்ணனின் பெண்டாட்டியை அனுபவிக்கலாம்; தம்பியின் பெண்டாட்டி தகாது.' மாயமான் சம்பவத்தில், சீதை இலக்குவனை ஏசுவதும் இந்த மரபுரிமை காரணமாகத்தான்.

கண்ணன் Vs மண்டோதரி கற்பனைக்கு இடமில்லை. கண்ணன் கவர்ச்சி உள்ளவன்; எவரையும் கவர்ந்து சென்றதில்லை.

ஆனால் இக் கதையெல்லாம் நமக்கு என்னத்துக்கு? அன்னா கரேனினா தற்கொலைக்குப் பர-ஒழுக்கமா, அல்லது அதன் byproduct ஆகிற possessiveness-ஆ, எது காரணம்?

இதில், உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றான 'அன்னா கரேனினா'வையும் எழுத்தார்வம் கொண்ட தமிழர்கள் வாசித்திருக்க மாட்டார்கள் என்பதே வருத்தம் தருவது. இந் நிலையில், எஸ்.ரா. போன்றவர்களின் வாசிப்பறிவு நமக்குச் சர்க்கரை என்று கொள்வதே சரி.

Sunday, October 2, 2011

கவிஞர் அசதாவின் பார்வையில் யுவான் ருல்ஃபோவின் எரியும் சமவெளி: அவலத் துயரின் அழகியல்.







அசாதாரண வாழ்நிலைச் சூழலில் அசாதாரண மக்களது வாழ்வை புனைகதையின் அசாதாரணமானதொரு வகைமாதிரிகளாகப் படைத்துத் தந்திருக்கும் தொகுப்பாக யுவான் ருல்ஃபோவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய எரியும் சமவெளி தொகுப்பைக் கூறலாம். வறட்சியும் வறுமையும் மேலிட்ட மத்திய மெக்ஸிகோவின் கடந்த நூற்றாண்டின் கொந்தளிப்பான முதல் கால்நூற்றாண்டும் அதைத்தொடர்ந்த ஏமாற்றமும் அவல நிலையின்பாற்பட்டதுமான காலகட்டமும் இக்கதைகளின் களமாக உள்ளன. 1910 முதல் பத்தாண்டுக்காலம் நடந்த மெக்ஸிகப் புரட்சியும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அரசுக்கெதிரான கத்தோலிக்க தீவிரவாதக் குழுக்களின் கலகமான கிறிஸ்டெரோக்களது கலகமும் நிகழ்ந்த இக்காலகட்டம் மெக்ஸிக வரலாற்றில் மிகுந்த நெருக்கடியான காலகட்டமாகும். புரட்சிகளும் கலகங்களும் மக்களை கொண்டு நிறுத்திய ஏமாற்றம் மற்றும் துயர் நிறைந்த வாழ்நிலையிலிருந்து தனது புனைகதைகளை ருல்ஃபோ படைக்கிறார். வறுமையாலும் துயராலும் வாழ்தலின் சுமையினாலும் அழுத்தப்படும் மனிதர்களது சித்திரங்களாக விரியும் அவை வாசகனை உலுக்குபவையாகவும் எக்காலத்துக்குமாக அவனைப் பின்தொடர்ந்து வந்து வாதைக்குள்ளாக்குபவையாகவும் உள்ளன.வெம்மைகூடி வறண்டுபோன, நம்பிக்கைகளழிந்த ஒரு நிலப்பரப்பின் நீட்சியாக அந்நிலத்தின் மனிதர்களும் மாறிவிட்டதான ஒரு தோற்றம் இக்தைகளினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பகட்டில்லாத தன் மொழியின் துல்லியத்தினாலும் இறுக்கமான கட்டமைப்பினாலும் அதிர்வூட்டும் யதார்த்தச் சித்தரிப்புகளாக இத்தோற்றத்தினை விஸ்தரிப்பதில் பெரும் ஆவல் கொண்டவராகவும் பேரளவில் அதில் வெற்றி காண்பவராகவும் ருல்ஃபோ இக்கதைகளில் காணப்படுகிறார்.

மக்காரியோவின் தன்மொழியாக அமைந்த ‘மக்காரியோ’ கதையில் சிதைவுண்ட மனதின் குழப்பமானதும் அரூபமானதுமான சித்திரங்களை தனது தனித்துவமான மொழி மூலம் வெளிக்கொணர்கிறார் ருல்ஃபோ. அதன்வழி அக்கதையில் வரும் ஞானத்தாய், ஃபெலிபா மற்றும் மக்காரியோ இவர்களது புற மற்றும் அக உலகு சார்ந்த படிம்மொன்றை உருவாக்குகிறார். ‘…என் எச்சிலைக் கொண்டு அவளைக் குணப்படுத்த முடியாதென்று நான் கண்டபொழுது, என் கண்களைக் கொண்டும் அவள் அழுவதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவினேன்’ என்பது போன்ற செவ்வியல் தன்மையுடையதான வரிகளமைந்த இக்கதையில் அவை ஆசியருடையதாக அல்லாமல் மனநிலை பிறழ்ந்த ஒருவனின் கூற்றாக கதையில் அதன் பொருத்தப்பட்டை அடைகின்ற விதத்தில் ருல்ஃபோ கதைமாந்தரது உணர்வையும் தனது மொழியையும் பிணைக்கும் விதம் அலாதியானது.

‘அவர்கள் தந்தது நிலம்’ கதையில் ஒன்றுக்கும் பயன்படாத நிலம், அதனை ‘மழை பெய்ய ஆரம்பித்தால், நீங்கள் பிடித்து இழுத்தால் வருவது மாதிரி சோளப்பயிர் கிடுகிடுவென வளர்ந்து விடும்’ எனக் கூறி அரசாங்கம் தந்துவிட்டுப் போகிறது. காற்று வீசி மேகம் திரளும்போதும் சபிக்கப்பட்ட அந்நிலத்தில் மழையென்று எதுவும் பெய்வதில்லை, ஒரேயொரு கணத்த துளியைத் தவிர. எதற்கும் பயன்படாத நிலத்தைக் கொண்டு என்ன செய்வது என்ற சோகத்தினை நேர்த்தியான வர்ணணைகளும் நுட்பமான உரையாடல்களும் கதையினூடாக நகர்த்திச் செல்வதை நாம் காண்கிறோம். ‘நாங்கள் மிகவும் ஏழைகள்’ கதையில் டாச்சாவின் மாட்டை பெருகி வரும் ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடுகிறது. இக்கதையில் ஆறும் அதன் வெள்ளமும் அது விளைவித்துப் போகும் அழிவும் டாச்சாவின் சகோதரனுக்குப் பொருட்டில்லை என்பது போல தனது ஒரே சொத்தான மாட்டை ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டதால், தனது மற்ற சகோதரிகளைப் போல டாச்சவும் கெட்டுப் போய்விடுவாளோ என்ற கவலையே பிரதானமாக இருக்கிறது. ஆறு உண்டாக்கும் பேரழிவின் பின்னணியில் டாச்சாவின் சகோதரனது இந்தக் கவலையை வைப்பதன் மூலம் ஆற்றின் அழிவுச் செயலை மட்டுப்படுத்தப்பட்ட பூதாகரத்தனத்துடன் ஆசிரியரால் காட்சிப்படுத்த முடிகிறது.

‘தால்பா’ கதையில் புனிதத் தலத்துக்குப் பாதயாத்திரை செல்லும் கூட்டத்தில் ஒருவன் நோய்பீடித்த தன் சகோதரன் மற்றும் அவனது மனைவியுடன் பயணிக்கிறான். மரணத்தை எதிர்கொண்டிருக்கும் சகோதரனுக்குத் துணையாக இவனும் சகோதரனது மனைவியும் செல்லும் பல நாள் பயணத்தில் அவனுக்கும் அவன் சகோதரன் மனைவிக்குமிடையிலான காதல் நமக்குத் தெரிய வருகிறது.இப்பயணம் எந்தப் பலனும் தராது என்பதை உணர்ந்தவர்களாய் தனது அண்ணன்/கணவனது ஆசையின் நிமித்தமாகவே அவர்கள் செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தவாறே அப்புனிதத் தலத்தில் அண்ணன் இறந்துபோகிறான். அதன் பிறகு நமது எண்ணத்துக்கு மாறாக அவர்கள் இறந்துபோனவனைப் பற்றிய எண்ணத்தால் தீவிர அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். ஒரு மரபான இந்தியக் கதையினது முடிவைப் போன்றவொன்றைக் கொண்டிருக்கும் இக்கதை மனித மனதின் ஆழ்மன விசித்திரங்கள் பற்றியதொரு கலாச்சாரங்கள் மற்றும் தேசங்கள் கடந்த பொதுமைப் பாட்டினை நாம் கருத இடமளிப்பதும் கூட.

‘எரியும் சமவெளி’ கதை புரட்சியின் போக்கில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பற்றியது. மெக்ஸிகோவின் ஆயுதமேந்திய முதலாளித்துவப் புரட்சி மனிதர்களை மலை மீதிருந்து வீசியெறியப்பட்ட கற்களைப் போலாக்கியதையும் அவர்கள் நிரந்தரமான அச்சத்திலும் துயரத்திலும் வாழ விதிக்கப்பட்டவர்களாக மாறியதையும் நுட்பமாக விவரிக்கும் கதை.

‘ருல்ஃபோவின் கதைகளில் மிக முக்கியமானதொன்றாக விமர்சகர்களால் கருதப்படும் ‘ அவர்களிடம் என்னைக் கொல்ல வேண்டாமென்று சொல்!’ கதை, வெளிப்படுத்தும் உணரச்சிகளிலும் விவரிக்கப்படும் உத்தியிலும் எளிமையான ஒரு கதையாகவே எனக்குத் தோன்றுகிறது. தொகுப்பின் ஏனைய கதைகளில் நிகழும் கொலைகள்,மரணங்கள் போலவே இக்கதையின் மரணமும் இயல்பான ஒரு மரணமாயிருக்கிறது.

‘நாய்கள் குரைக்கவில்லை’ சிறப்பானதொரு கதை. தந்தைக்கும் மகனுக்குமான உறவினை நுட்பமாகச் சித்தரிக்கும் இக்கதை அழுத்தமானதொரு முடிவைக் கொண்டுள்ளது. ‘அனாக்ளீட்டோ மோரோனஸ்’ இத்தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று. அங்கதமிக்க இக்கதை புனிதம், புனிதர்கள் குறித்த மக்களது மனக்கட்டுமானம், ஏதுவான சந்தர்ப்ப நிலைகளின் மூலமாக மக்களது அறியாமை மற்றும் பக்தி போன்ற பலகீனங்கள் மீது இவைகள் கட்டமைக்கப்படுவதையும் சிறப்பாக விவரித்திருக்கும் கதை.

ருல்ஃபோவின் கதையுலகம் பெரிதும் நம்பிக்கையின்மை, துரோகம், துயரம் ஆகிய அகக் காரணிகளாலும் வறட்சி, வெம்மை, சண்டை, தப்பியோடுதல் ஆகிய புறக் காரணிகளாலும் கட்டப்பட்டது. தீர்க்கமான பார்வையும், பிரக்ஞைபூர்வமாக நுட்பமும், துல்லியமும் கொண்ட மொழியும் அவரது கதைகளை முதல் வகைமாதிரிக் (prototype) கதைகளாக்குகின்றன. இக்கதைகள் சொல்லும் மொழியினாலும் நுட்பத்தாலும் புதிய வகைமாதிரிகளாக தம்மை அறிவித்துக் கொண்டாலும் அழகியல் ரீதியாகவும் வெற்றி பெறுபவை. இக்கதைகளின் இந்த அழகியல் தன்மையே இவற்றை ஒருவர் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதாக இருக்கக் கூடும்.தென்னமெரிக்க இலக்கியத்திலும் அதற்கு வெளியிலும் யுவான் ருல்ஃபோ என்ற புனைகதையாளர் பெற்றிருக்கும் இடம் ஏதோ தற்செயலானது அல்லது என்பதற்கு அவரது கதைகள் புனைகதையின் அனைத்துப் பரிமாணங்களிலும் தனித்துவமான கூறுகளைக் கொண்டு வாசிப்பின்பம் குறையாது விளங்குவதே சான்றாக இருக்க முடியும்.

ஏனைய லத்தீனமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள ருல்ஃபோ தவறவில்லை. உதாரணமாக கோர்த்தஸாரும் மார்க்வெஸூம் மொழியினை நடனமாட வைத்து அது சுழன்றாடும் அழகை ரசித்தார்களென்றால் ருல்ஃபோ கறாரான எஜமானராக மொழியிடம் வேலை வாங்குகிறார். எப்போதும் மொழியின் இம்மி பிசகாத பரிபூரணம் அவரது தேவையாயிருக்கிறது. சற்று பிசகினால் intellectual labour என்ற முத்திரை விழுந்துவிடக்கூடிய தனது எழுத்து முறையை நிறைவான இலக்கியப் பிரதிகளுக்கானவொன்றாக அவரால் மாற்றிக் கொள்ள இயல்வதையும் நாம் இங்கு கருத்தில் கொண்டாக வேண்டும். தனது புனைவுகள் வழியாக அவர் யதார்த்தத்துக்கும் இயல்புக்கும் அப்பாற்பட்டவொன்றைக் கட்ட முனைவதில்லை என்பதாலும் சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் அவலமிக்க மனிதர்களை அவர்களது வாழ்வின் வெம்மை குறையாமல் ஆடம்பரமில்லாத ஒரு மொழிக்குள் அடக்க முயன்றார் என்பதாலேயுமே அவரால் இது இயன்றிருக்கிறது.


இத்தொகுப்பை ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஜார்ஜ் டி. ஷேட் மற்றும் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் எஸ். பாலச்சந்திரன் ஆகியோரது விரிவான முன்னுரை மற்றும் பின்னுரைகள் யுவான் ருல்ஃபோவின் புனைவுலகுக்கான விவரமானதொரு வழிகாட்டுதலை வழங்கிவிடுவதனால் இத்தொகுப்புக்குள் வாசகன் தடையற்று நுழைவதும் கதைகளை சிரமமின்றி அணுகுவதும் ஏதுவாகின்றது. கவனமாக வடிவமைக்கப்பட்டு வெகு நுட்பமும் சிக்கனமுமான மொழியினால் இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட ருல்ஃபோவின் கதைகளுக்கான திறப்புக்களை இவை சாத்தியமாக்குகின்றன. இன்னொரு கோணத்தில் பார்க்கையில் விமர்சனப்பூர்வமாக இக்கதைகளை அணுக முயலும் ஒருவனது பார்வையில் மேலே சொன்ன விஷயங்கள் தமது தாக்கத்தை செலுத்துவனவாக அமைந்திருந்தாலும் அவற்றின் இன்றியமையாமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

மொழிபெயர்ப்பில் ஒரு வரியை அல்லது ஒரு சொற்டொடரை எடுத்துக்கொண்டு தமது சீரிய மொழியறிவின் அளவுகோல்களால் அது பிழையானதென்று நிறுவி அம்முழு ஆக்கத்தையுமே ஒன்றுக்கும் உதவாதது என நிராகரிக்கும் மேதமை சான்ற மதியாளர் நிரம்பிய நம் சூழலில் மொழிபெயர்ப்புப் பணி புரிவோரின் நிலை பற்றிச் சொல்லத் தேவையில்லை. எதிர்மறையான இச்சூழலில் எவ்விதப் பலனையும் எதிர்பாராதவர்களாய் இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களில் எஸ். பாலச்சந்திரன் அவர்களும் ஒருவர். தமிழுக்கு அரியதும் காத்திரமானதுமான பல படைப்புக்களை அவர் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘எரியும் சமவெளி’ மொழிபெயர்ப்பில் சவால்தரும் ஆக்கம். இதனை அவர் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். இதற்காக தமிழ் கூறும் நல்லுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.

7-5-11 அன்று நாகர்கோவிலில் லஷ்மி மணிவண்ணன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 




நன்றிகள் : கவிஞர் /மொழிபெயர்ப்பாளர் - அசதா 

Wednesday, September 14, 2011

க.பாலாசியின் ’ வதம்’

           துண்டான சிலந்தியின் கால் துடிப்பதைபோல அவளின் இடதுகை மட்டும் பாயில் புரண்டிக் கொண்டிருந்தது. இரண்டு கண்முழிகளும் பிதுங்கி மேற்நோக்கி நிலைகுத்திவிட்டது. இந்நேரம் அவள் நாடி அடங்கியிருக்கும். இத்தனை ரண வேதனையும் நெஞ்செரிச்சலையும் தாண்டி என்மனதில் பூரண நிம்மதி, சந்தோஷம். இரண்டுவாரமாக இருந்த என் வயிற்றெரிச்சல் இன்று அடங்கிவிட்டது. ஆனாலும் வாய்விட்டு சிரிப்பதற்கு என்னிடம் திராணியில்லை. ஒரே இறுக்கமாக இருக்கிறது. இந்த மரமட்டைகள் அசைந்து தொலைத்தால் தேவலை. வாசற்கதவுக்கூட திறந்துதான் கிடக்கிறது.  இவள் போட்ட இந்தக்கூச்சலை யாராவது கேட்டிருப்பார்களா? இருக்காது... இருக்காது. எனக்கே லேசாகத்தான் கேட்டது.  பாஷாணம் எனக்கும் வேலை செய்கிறது. மெல்ல மெல்ல பார்வை மறைவதை நன்றாக உணரமுடிகிறது. கூரையின் மோட்டுவலைக் குச்சிகள் கோடுகோடாய்த்தான் தெரிகிறது.


காலையில் செய்தி தெரிந்தபின் என்னாகுமோ!? கலைந்த கோலமும் அதனை மொய்க்கும் எறும்புகளுமாய் ஊர் சனமே கூடி நிற்கும். ஆளாளுக்கு வாயில் வந்ததை மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். “சும்மாவாடி சொன்னாங்க… புத்திக்கெட்டதுங்க பூமிக்கிப்பாரம்னு” , “இந்த ரெண்டுங்கெட்டானோட வாழறதுக்கு அவ இப்டி சாவலாங்கறேன்” “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வளத்தத தாரவாத்துட்டுதுங்க, இனி இருந்தென்ன? இல்லன்னாயென்ன? பேரன்பேத்தி பாத்துட்டு போயிருக்கலாம், என்ன கஷ்டமோ என்னமோ?” இப்படி. எப்படியும் எவனாவது ஓடிப்போய் பபிதாவுக்கு தந்தி அடித்துவிடுவான். அவளிடமிருந்து வந்த கடிதங்கள் குதிருக்கு பக்கத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலேயே அவளின் முகவரியும் இருக்கிறது. MOTHER AND FATHER DEAD அல்லது VAITHYANATHAN AND ANNAM DEAD இப்படித்தான் கொடுக்கப்போகிறார்கள். இப்படித்தான் நாலைந்து எழவு வீடுகளுக்கு நானும் கொடுத்திருக்கிறேன்.


செய்தி தெரிந்தால் பபிதா துடித்துதான் போவாள். சிறா உடைக்கும் கோடரியை நடுமாரில் போட்டதுபோல்தான் இருக்கும், வயிறிலும் வாயிலும் அடித்துக்கொள்வாள். அந்த நேரத்தில் பஸ் கிடைக்குமோ என்னமோ?. அவளுக்கு எங்களைவிட்டால் நாதியில்லைதான், அதுவும் என்மேல் அவளுக்கு ரொம்பவே ப்ரியம். ஒரே பெண், சொல்லவா வேண்டும்.. எத்தனை ஊட்டி வளர்த்திருக்கிறேன். இவள் வயிற்றில் பிறந்ததுதான். கல்யாணம் முடிந்து இரண்டுவாரம்தான் ஆகிறது. நேற்று ஊருக்குப் போகும்போது கலங்கிய விழிகளுடன் என்னையேன் அப்படிப் பார்த்தாளென்று தெரியவில்லை. தீர்க்கதரிசனம் என்பார்களே! அதுபோல் எதாவது இருந்திருக்குமோ? இருக்கும் இருக்கும்.. நான் வளர்த்தவளாயிற்றே. பெண் வீட்டாரின் மூன்று அழைப்புகளும் முடிந்து ரெண்டுபேரையும் நேற்றுதான் அனுப்பிவைத்தோம். நானும் அவள் நல்லபடியாக போகட்டுமென்றுதான் காத்துக்கிடந்தேன். பபிதாவை நினைத்தால் கொஞ்சம் சங்கடமாகயிருந்தாலும் இது சரியான முடிவுதான். என்ன செய்வது?.


பலநாள் திருடன் ஒருநாளில் மாட்டுவான் என்பார்கள். ஒருவேளை அந்தச் செய்தி பப்பிக்குத் தெரிந்தால்... அவ்வளவுதான், நாண்டுகொள்வாள், இதைவிட பெரிய அவமானம் அவளுக்கு கிடையாது. குடியே முழுகிவிடும். அய்யோ, வேண்டாம்..வேண்டாம், நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த மாதிரி நடப்பதற்குதான் இனி வழியில்லையே. அன்னம் வாய் திறந்தால்தான் உண்டு. அவள் வாய்தான் பிளந்துகிடக்கிறதே. ஹ..ஹ... என்னமோ சொல்வார்களே கரவம் கட்டி பழிதீர்ப்பதென்று. இந்த ரெண்டு வாரமும் என் மனம் கிடந்து எப்படித் துடித்தது, யாருக்காவது தெரியுமா?.. எத்தனை சாணக்கியக்காரி, கைகாரி இந்த அன்னம். நாக்கில் எத்தனை கொடுக்குகள். சாகும்போதுக்கூட என்ன துடுக்கான பேச்சு பேசுகிறாள்.


எனக்கும் அன்னத்துக்குமான இந்த 24, 25 ஆண்டுகால வாழ்க்கை மேம்போக்காக அப்பா, அம்மா ஸ்தானத்தில் பப்பிக்கு தெரிந்தாலும் இலைமறை காய்மறையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த விசயம் வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்னாவது? வெளியுலகம் கிடக்கு, முதலில் பபிதாவிற்கு தெரியாமலே போய்விடவேண்டும். இனித்தெரியவும் வாய்ப்பில்லை. சுப்பிணி ஒருத்தனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.  அவனும் சொல்லக் கூடியவனில்லை. மானஸ்தன்தான். என்ன பெரிய மானஸ்தன்? பொல்லாத மானஸ்தன், நயவஞ்சகன்... காரியசாலி.. அவனைவிட்டால் இது வெளியில் ரெண்டாம்பேருக்கு தெரியாது, சொல்லமாட்டான் அவன்...


தெரிந்தால்தான் என்ன? நான் இனி எதைப் பார்க்கப்போகிறேன். தோ, இந்த பூரணம் அற்பமாகப்போகிறது. பிராணன் போனப்பிறகு என்ன நடந்தால் என்ன..? இந்த சுப்பிணி இல்லையென்றால் எனக்கும் அன்னத்துக்குமான வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்!! இருந்திருக்குமா? அவன் முன்னமே செத்திருந்தால் இது சாத்தியம். நிச்சயம் இருந்திருக்கலாம், ஆனால் இவள்.. நெஞ்செல்லாம் வஞ்சம், சண்டாளி... செத்தாள் சனியன், சாகட்டும், சாகட்டும்.


அப்போது எங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாதமாகியிருந்தது. தனிக்குடித்தனம். அதற்குள் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது, மாயை. வேண்டா வெறுப்பான வாழ்க்கையாக தெரிந்தது. கொல்லன் பட்டறையில் பதம் பார்த்தடித்த அரிவாள் முனையில் சம்மட்டியை போட்டு மழுங்கடித்தாற் போலாகிவிட்டது. வேறென்ன சொல்வது? அன்னம் அன்று காலரா வந்துகிடந்தாள். பக்கத்தில் பார்த்துக்கொள்ள ஆளில்லை. இருவர் வீட்டிற்குமே நான் சொல்லவுமில்லை. பார்த்துக்கொள்ளலாமென்ற அசட்டை. நான் பட்டறையில் கிடந்தேன். முதல்நாளே வயிற்றைப் பிடித்துக் கிடந்தவளை நான்தான் அலட்சியப்படுத்திவிட்டேன். அவளும் தன் தீவிரத்தைக் காட்டவில்லை. இந்த சுப்பிணி பக்கத்து வீட்டுக்காரன். துணிமணியெல்லாம் கழிந்து கிடந்தவளை தூக்கிக்கொண்டு அவன்தான் ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்கிறான். பிறகு சேதிவந்துதான் அரக்கபறக்க நானும் ஓடினேன். காய்ந்த மாவிலைப்போல படுக்கையில் கிடந்தாள். எனக்கும் உச்சிமண்டையில் அப்போதுதான் உரைத்தது. ஒரு உயிரை உதாசீனப்படுத்துமளவுக்கு எத்தனை வன்மம், வக்கிரப்புத்தி எனக்கு. படித்து என்ன பிரையோஜனம். ஒன்றுமில்லை. ஒரு நல்ல வேலைக்குக்கூட போகமுடியவில்லை, நல்ல புத்தியும் இல்லை, இந்த உடல், நடை, உடை, பாவனை எதுவும் ம்கூம்....


அப்போதெல்லாம் நான் சுப்பிணியை தினமும் வணங்காத குறைதான். அவ்வளவு மதிப்பு அவன் மீதிருந்தது. நண்பர்களைப்போல நல்ல பழக்கம்தான் சுப்புணிக்கும் எனக்கும். அவனுக்கு நல்ல தலதல உடல்வாகு, மண்வெட்டி இலைபோல ஏந்தலான மார்புகள், தலை, கை, கால், மூக்கு முழி எதுவும் குறையில்லை. என்னைப்போலில்லைதான். எனக்கென்ன குறைச்சல் நானும் அவனைப்போல ஆண்பிள்ளைதான், ஆமாம் ஆண்பிள்ளைதான். அன்னத்தை தவிர எல்லாருக்கும் நானொரு ஆண்மகன்தான். தாம்பத்தியத்தை அன்னம் ரொம்பவும் விரும்பியிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் வெறும் தாம்பத்தியம்தான் இந்த வாழ்க்கையா? ச்ச்ச.. நானும் அவ்வாறு நினைக்கவில்லைதானே. அதிலும் குறையாக எனக்கு தெரியவில்லையே...


ஆனால் அன்னம்.. இந்த அன்னம்.......? இதோ கோசா..கோசா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே செத்துப்போனாளே இந்த அன்னம்.. இவளைத்தவிர நான் எல்லோருக்கும் ஆண்பிள்ளைதான். என்னைப்பற்றி யாரிடமாவது சொல்லியிருப்பாளா? இருக்காது, சொல்லியிருந்தால் அக்கம் பக்கத்துக்கு சிறுக்கிகள்
என்னை ஏளனமாக பார்த்திருக்கவேண்டும். யாரும் அப்படி பார்த்ததே கிடையாது. ஆங்... ஆனாலும் சகுந்தலா சிறுக்கி மட்டும் ஒருமாதிரி வெடைப்பாக பார்ப்பாள், அப்பப்பா அதில்தான் எத்தனை எள்ளல்...!! த்தூ...


எப்போதோ பள்ளிவயதில் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சிங்கானோடை ஜோசியக்காரன் சொன்னான், அந்த கருநாக்கன்தான் சொன்னான்..  இன்னும் ஞாபகமிருக்கிறது. ‘இது, பொம்மனாட்டி ஜாதகம்ல, இது தப்பிப்பொறந்தது, கேந்திரஸ்தானம், லக்னத்துல புதனும், சுக்கிரனும் சேந்துக்கெடக்கான், சந்திரன்  உச்சம்... புதன் அலி, சுக்கிரனும், சந்திரனும் பொம்பளச் சாதி.... ம்ம்ம்... ஜாதக அம்சமே அதாஞ்சொல்லுது, ஆளு பாத்தாலே தெர்லயா... ‘ஆனாலும்?’ இரண்டு மூன்று விரல்களை எண்ணிவிட்டு பிறகு சொன்னான் ‘....... காலத்துல சரியாயிடும், பாருங்க. கெட்டிக்காரனாயிடுவான்’.


உண்மைதான், என் பேச்செல்லாம்கூட ரெண்டுங்கெட்டான் நிலைதான், இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன், மாற்றிகொண்டேனென்றால் அதிகம் எவரிடமும் பேசுவது கிடையாது. வாயைக் குதப்ப வெற்றிலைப் பாக்கு, இருக்கவேயிருக்கு. வேறென்ன.. அப்போதெல்லாம் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள ரொம்ப பிரியப்படுவேன். ஏனென்றும் தெரியாது. அந்த பருவத்தில் ஆண்கள் மீதான விருப்பம்தான் மிதமிஞ்சியிருந்தது. பள்ளியில் என்கூட படித்த பயல்கள் எல்லாமே முதுகுக்குப்பின்னாடி ‘கோசா, ஒம்போது’ என்றுதான் பேசிக்கொள்வார்கள். எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் எனக்கு அது பொருட்டில்லை, பழகிப்போய்விட்டது.


ஒரு மாட்டின் கன்றுக்குட்டியை தினமும் தூக்கிப்பழகினால், அது மாடானப்பிறகும் நம்மாள் தூக்க முடியும். அதுபோல்தான் எல்லாமே எனக்கு பழகியிருந்தது. புளித்துப்போன வார்த்தைகள். ஒரு உச்ச வெறுப்பான நாளில் அன்னத்துக்கும் எனக்கும் சண்டை. பப்பிக்கு அப்போது மூன்றரை வயதிருக்கும். அன்னம் என்னை ‘வாடா, போடா’ போட்டு திட்டினாள். ஓங்கி அறைந்தேன், ‘டேய் கோசாப்பயலே என்னையாடா அடிக்கிற? சாண்டக்குடிக்கார, உங்கூட எவளாச்சும் குடும்பம் நடத்துவாளாடா, இம்மாந் தண்ணிக்கு உன்னய தெருவுல கையேந்த விடறேன்டா’ என்று பிடித்து தள்ளினாள், பிறகு அப்பன் வீட்டுக்கு போய்விட்டாள். பிறகு மாமனார் சமரசம், இத்யாதிகள். ஆனாலும் அவள்மனதில் என் மீதான இளக்காரப் பார்வை தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. நிஜமாகவே குமட்டுகிறது... உவ்வ்வ்... பாஷாணம் வேலை...


இத்தனை நாள் இல்லாத அல்லது தெரியாத அந்த இடி இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் என்தலையில் விழுந்தது. அது எனக்கு தெரியாமலே இருந்திருக்கக்கூடாதா?... பப்பி என் மகளே இல்லையாம்.


‘மகமாயி.. மகமாயி.. நித்தம் உன்னக் கும்பிடுறனே... என்னடி சோதனையிது..’ கொல்லைக்கட்டில் இந்த சிறிக்கியும், அந்தப்பயலும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, எவ்வளவு அன்யோன்யமாக பேச்சு அவர்களுக்குள், குசுகுசுன்னு. ‘தாயே... மகமாயி...மகமாயி... நீயாச்சும் அப்பவே இவள காட்டிகொடுக்கக்கூடாதா?...’ ஆமாம் தெரிந்துதான் என்ன? ஒன்றும் கிடையாது. என் வாழ்க்கையே பப்பிக்காகதானே... அதெப்படி? இத்தனைக்காலம் எனக்குத் தெரியாமல்.... இவர்களின் உறவு புடம்போட்டதுபோல் மறைந்திருக்க முடியும்?.. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கும், எத்தனை நாள், ராப்பகல் பாராத பட்டறை வாழ்க்கை.. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது பிறகென்ன... பப்பிக்குப்போட்ட அந்த நாலு பவுன் நகையும், அவன்தான் கொடுத்திருப்பானோ? அவனேதான்.. நான் கேட்டதுக்கு இவள்தான் பதிலே சொல்லவில்லையே.. அப்படித்தானிருக்கும். அய்யோ பப்பி.. பப்பி..  ‘ச்ச்ச்ச்ச... இதென்ன புதிசா.. ஞாபகம் கொடுக்கும் பப்பியின் முகம் அவன் மூகமாட்டம்... அந்த உள்ளி மூக்கு அவனுடையதுதானோ? அவனுடையதுதான்.. அவனுடையதுதான்.. அப்படியே அவனைத்தான் உரித்துவைத்திருக்கிறாள். இத்தனைநாள் எனக்கு தோன்றவில்லையே.. இதென்ன.. ச்சை..ச்சை..


இந்த பாஷாணம் என்ன இப்படி உடம்பை முருக்குகிறது. யப்பா.. நெஞ்சிக்குள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுபோல் எரிகிறது.... அன்னம் இன்று பரங்கிப்பழம் போட்டு பூண்டுக் குழம்புதான் வைத்திருந்தாள். அதில்தான் இதை ஊற்றினேன். பூண்டு வாடை எல்லாவற்றையும் மறைத்தேவிட்டது. நல்லதுதான். ஒன்றரை தட்டு சாதமாவது சாப்பிட்டிருப்பாள். தெரிந்ததாலோ என்னமோ அரைதட்டுக்குமேல் என்னால் முழுங்க முடியவில்லை. ரெண்டு மொனரு தண்ணீரும் குடித்தேன்.


அன்னம் போய்ச்சேர்ந்து இவ்வளவு நேரமாகியும் நான்மட்டும் இழுத்துக்கொண்டு கிடக்க அதுதான் காரணம். ஆனாலும் பூண்டுக்குழம்பில் பரங்கிப்பழம் போட்டால் எவ்வளவு ருசி!! நன்றாக வெந்த சேமியாபோல அதன் சதைகள், ஹும்.. ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும். ‘நாடகம் விடும் வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா....’ பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. ‘கண்ணெல்லாம் சொருகுதுடி, நெஞ்செரிச்சல் தாங்கமுடியலடி ப்ப்பி...தாயீ.. நீ என் பொண்ணேயில்லையாமே?.. அய்யோ..அய்யோ..அய்யோ.. இது அடுக்குமா? தலையிலகூட அடிச்சிக்க முடியலடி.. சண்டாளி... செத்தா... இப்டி ஒரு வாழ்க்கை தேவையாடி ஒனக்கு அன்னம்..?? தேவயா......’ பூலோகம் இருண்டது.



நன்றி :அதீதம் மின்னிதழ் 

Monday, August 29, 2011

க.பாலாசியின் ‘ராசம்’ சிறுகதையும் எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வையும்

என்றுமில்லாது இன்று ஆளோடிக்கட்டிலில் கொஞ்சம் படுக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டினுள்ளே டங்..டங்.. என்று தரை அதிர்வதற்கு என் மனைவிதான் காரணம். பெயர் ராசம். இந்த 26 வருட திருமண வாழ்வில் அவளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருந்திருக்கிறது. ஆயினும் எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. சின்ன வயதில் தந்தையை இழந்த என்னை பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தது என் அம்மாதான். மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி வேறென்னவாக இருக்கமுடியும். என் பாட்டன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.

ஒரு படி மேலேபோய் என் தாத்தன் குடும்பச்சண்டையில் பாட்டியின் காலை கடப்பாறையால் முட்டிக்குமேலே ஓங்கி அடித்திருக்கிறான். அய்யோ..அய்யோ...என்று அடுத்தவீட்டுக்குகூட கேட்காதபடி அலறிவிட்டு அடுத்தவேளை சோற்றை பொங்கிப்போட்ட புண்ணியவதி அவளென்று குடும்ப வரலாறை கேட்கும்போதெல்லாம் என் அத்தை கண்ணீர்மல்க கூறுவாள். எவ்வளவு கொடியவன், கிராதகம் பிடித்தவன் என்று அப்போதும் நினைத்துக்கொள்வேன். இப்போது நினைத்தாலும் அப்படித்தான். பித்துக்குளி. நல்லவேளை நமக்கந்தளவுக்கு புத்திகெட்டுப்போகவில்லை என்பதற்கு என் படிப்பறிவோ, பகுத்தறிவோ காரணமாயிருக்கும் அக்காவின் மகளை அவளின் 16 வயதில் கட்டிக்கொண்டேன். என் குடும்ப ரத்தம்தான் ராசத்திற்கு. அதனாலோ என்னவோ என்னிடம் அரைவாங்கி கண்ணம் வீங்கினாலும் எனக்கு சோறு உண்டு. 3 வருட தாம்பத்தியத்தில் பெற்றெடுத்ததை மலர்கொடி என்ற நாமம்சூட்டி ஒருவழியாக சென்றவருடம் கரையேற்றினேன். கரையேற்றினேன் என்பதுதான் அத்தனை சிரமங்களுக்குமான ஒற்றைச்சொல்.

ஒரே பெண் வேறெதுவுமில்லை. சிறுவயதில் அவள் சில்லிக்கோடு விடையாடும் அழகு தனிதான். கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நானும் ராசமும் மற்றவர்களுடன் அவள் போட்டிப்போட்டு துள்ளி துள்ளி நொண்டியடித்து விளையாடும் பாங்கை ரசித்திருக்கிறோம். ராசம்தான் அவளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தாள். ராசமும் சிறுவயதில் இந்த விளையாட்டில் தேர்ந்தவள்தான். பெண் பார்க்க நிச்சயமாகி சிங்காரத்தின் கூண்டு வண்டியை வாடகைக்கெடுத்து போகும்போதுகூட தெருவாசலில் விளையாடிக்கொண்டுதான் இருந்தாள். ‘விளையாட்டுப்பிள்ளையாவே வளந்துட்டா, போ..போ..மூஞ்சி கழுவியா’என்று அவளை துரத்திவிட்டு மாமா என்னிடம் அசடு வழிந்ததுகூட இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஏணிப்படிகள்போல ஆறு பெட்டிகளுடன் கூடியதில் மலையிலிருந்து ஆரம்பித்து 5,4,3,2,1 வரை வந்து பிறகு, கைமேல் சில்லியை வைத்து நொண்டியடிக்கவேண்டும். புறங்கை, விரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, இறுதியாக மேட்டா கீட்டாவில் முடியும் அந்த விளையாட்டு தெருப்பெண்களின் சமயோசித விளையாட்டு, இன்னும் சொல்வதானால் பாரம்பரிய விளையாட்டு. மேட்டா கீட்டாவில் எந்த பெட்டியில் சில்லியை போடுகிறோமோ அந்த பெட்டி ஒரு உப்பு என்று விளையாடிய பெண் கோடுபோட்டுக்கொள்வாள். அந்த பெட்டியை எதிராளி நொண்டியடிக்கும்போது தாண்டித்தான் செல்லவேண்டும். விதிமுறை. வயதுக்கு வந்த பின்னும் மலருக்கு இந்த விளையாட்டு அலுக்கவில்லை. ராசத்திற்கும் வேடிக்கை பார்ப்பதும் அலுக்கவில்லை.

என் மகளை பெண்பார்க்க வந்தபோதும் சில்லிக்கோடுதான் விளையாடிக்கொண்டிருந்தாள். என் மாப்பிள்ளையிடம் நான் அசடுவழியவில்லை. சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, பார்க்க அழகாயிருந்தாலும்கூட. நான் வேலைக்கு சென்றபின் ஆக்கி இறக்கி வைத்த நேரம்போக ராசத்தை வேறெந்த வேலைகளும் இழுத்துப்பிடிக்கவில்லை. மிஞ்சிப்போனால் என் துணிகளை துவைப்பாள். உண்டு தின்ற ஏனங்கள். அப்படியேதும் அவளின் தனிமையை ஆட்கொண்டதாக தெரியவில்லை, ஏன் நானும்கூட. என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.

இரவுகளில் ராசம் தூங்கும் போது எதோ நெஞ்சழுத்தக்காரியின் முகமாகத்தான் அவள் முகம் இருக்கும். என் முகத்தைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். சென்றமாதம்தான் அவளின் நெஞ்சாழ்மையை இந்தக்கோலத்தில் பார்த்தேன். ஒரு கண்ணாடியும் அது உடைந்தால் தெரியும் இரண்டு பிம்பங்களுமாய் என் முன் அவள். மலரின் அந்த பச்சைக்கலர் பாவாடை தாவணியை உடுத்தியிருந்தாள். இந்த 45வது வயதில் அவளுக்கு எடுப்பாகத்தான் இருந்தது என்று சொன்னால் நான் பைத்தியமோ என்று எனக்கே தோன்றும். சிகையில் இரட்டைப்பின்னல் வேறு. கொல்லையில் பூத்திருந்த திசம்பர் பூவைக் கட்டி சூடியிருந்தால். அந்த நெத்திச்சுட்டி ஏதென்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அகோரமான தோற்றம்தான். அருகில் செல்லும்வரை என்னைப்பார்க்காதவள் சென்றவுடன் விரைத்த உடலுடன் மலங்க மலங்க விழித்தது என் 52 வருட வயது முரட்டையும், திடகாத்திரத்தையும் பொலபொலவென விழ்த்தியது. இன்று நினைத்தாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வரத்தான் செய்கிறது.

நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.

*



எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வை 


சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது

ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது

நன்றி திரு.ஜெயமோகன் - http://www.jeyamohan.in/?p=12992